×

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்பியதால் வாகன நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்த பரனூர் சுங்கச்சாவடி

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் விடுமுறை முடிந்து நேற்று சென்னைக்கு திரும்பினர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்கள்  கடும் அவதிக்குள்ளானார்கள்.
தீபாவளி பண்டிகை கடந்த 6ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் வசிக்கும் பலர், தீபாவளியை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். அந்த வகையில் தென்மாவட்டங்களை சேர்ந்த பலர், கடந்த 3ம்  தேதி முதலே சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்தை சீரமைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் எஸ்பி. சந்தோஷ் ஹதிமானி தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இதர வாகனங்களுக்கு  தனித்தனி வசதிகள் செய்து கொடுத்து நெரிசலை போலீசார் கட்டுப்படுத்தினர். கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில் சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாடி விட்டு ஏராளமானோர் நேற்று சென்னை திரும்பினர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலையில் இருந்து பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றான நத்தை போல ஊர்த்து சென்றது.பின்னர், தகவல் அறிந்து காஞ்சிபுரம் எஸ்பி., பரனூர் சுங்கச்சாவடி மற்றும் வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, பரனூர்  சுங்கச்சவாடியில், சென்னைக்கு வரும் வாகனங்களுக்கு கூடுதல் வழிகள் ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து மொத்தமுள்ள 12 வழித்தடங்களில் 10 வழிகளில் வாகனங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதனால்  நெரிசல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.இதே போன்று பெரும்புதூர், மதுரவாயல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார், நெரிசலை சரிசெய்தனர். இருப்பினும் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

வாகன ஓட்டிகளுக்கு டீ, காபி
நீண்ட தூரத்தில் இருந்து வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களுக்கு சில நேரங்களில் தூக்கம் வர வாய்ப்புள்ளது. அவற்றை தடுப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி.யின் உத்தரவுபடி டிஎஸ்பிக்கள் வண்டலூர் வளவன்,  செங்கல்பட்டு கந்தன் தலைமையில், பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு டீ, காபி, பிஸ்கெட், வென்னீர் வழங்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்து பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்ட அறிவுறுத்தப்பட்டது. பயணிகளுக்கு  மொபைல் டாய்லெட் வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : home towns ,Dhanavalai ,Chennai , Deepavali ,native town, Paranur Cungabhavadi,traffic jam
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...