×

‘சர்கார்’ திரைப்படத்தில் அரசுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி கட் அவுட், பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம்: திரையரங்குகள் முன்பு விஜய் ரசிகர்கள் திரண்டதால் போலீஸ் குவிப்பு

சென்னை: சர்கார் திரைப்படத்தில் அரசுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகவும் அதை நீக்க கோரியும், ெசன்னை மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் திரையரங்கம் முன்பு வைக்கப்பட்ட கட் அவுட், பேனர்களை கிழித்து  அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து திரையரங்குகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நடிகர் விஜய் நடிப்பில் “சர்கார்” திரைப்படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கிடையே திரைப்படத்தில் தமிழக அரசு  திட்டங்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த காட்சிகளை நீக்க கோரி அமைச்சர்கள் வலியுறுத்தினர். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சர்கார் திரைப்படம் ஓடும் திரையங்குகள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள காசி திரையரங்கு முன்பு நேற்று மாலை  விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், அதிமுக தென்சென்னை மாவட்ட செயலாளருமான விருகை ரவி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அப்போது சர்கார் திரைப்படத்தில் அரசுக்கு எதிராக பல காட்சிகள் இடம்  பெற்றுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் உடனே நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த எம்ஜிஆர்.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ விருகை ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட  அதிமுகவினர் திடீரென காசி திரையரங்கம் முன்பு நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டிருந்த 30 அடி உயர கட் அவுட்டை உடைத்து எறிந்தனர். அத்தோடு இல்லாமல் அனைத்து பேனர்களையும் கிழித்து எறிந்தனர்.இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முன்பு நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜயின் கட்அவுட் மற்றும் பேனர்கள் கிழிக்கப்பட்ட தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் காசி  திரையரங்குகள் முன்பு குவிந்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.இதையடுத்து காசி திரையரங்கம் முன்பு தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் சற்று பதற்றம் தணிந்தது.  அதிமுகவினரின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் தியேட்டர் முன்பு ரகளையில் ஈடுபட்டனர்.

உதவி கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு
அதிமுகவினரின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து சென்னையில் சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்குகளான சத்யம், எஸ்கேப், தேவி, ஐநாக்ஸ், உட்லண்ட்ஸ், அபிராமி 7 ஸ்டார், ஆல்பட், அன்னை, சங்கம், ஈகா, ரோகிணி,  ராக்கி என அனைத்து திரையரங்குகள் முன்பும்  போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி அந்தந்த பகுதியில் உள்ள உதவி கமிஷனர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 பேர் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarkar ,government ,fight , 'Sarkar' , anti-government, theaters,theaters
× RELATED சர்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு