×

ராயல் என்பீல்ட் தொழிற்சாலை விவகாரம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

சென்னை: ராயல் என்பீல்ட் தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 60 ஆண்டுகாலமாக சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் ராயல் என்பீல்ட்  தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு, ஒரகடம் மற்றும் வல்லத்தில் இரு தொழிலகங்கள் 2013ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தற்போது திருவொற்றியூர் தொழிற்சாலையில் 74 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிறுவனத்தில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.2ஆயிரம் கோடி லாபம் ஈட்டி வருகிறது. ஒரகடம் தொழிற்சாலையில் 714 நிரந்தர  தொழிலாளர்களும், நிரந்தரப்படுத்தப்பட வேண்டிய தகுதிக்கான பருவம் அடைந்த 700 தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் ஆயிரம் பேர், கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் என மொத்தம் சுமார் 3500 பேர் பணிபுரிந்து  வருகின்றனர்.

இங்கு தொழிற்சங்கம் இல்லாத நிலையில் ஏப்ரல் 2018 முதல் உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்ற தலைவர் குசேலர் தலைமையில் சங்கம் துவக்கப்பட்டது. கடந்த ஐந்து மாத காலமாக அமைதியாக பிரச்சினையின்றி  நிர்வாகத்திற்கு எவ்வித இடையூறுமின்றி சங்கம் ஒத்துழைத்து வந்தது. ஆனால் தொழிற்சாலை நிர்வாகமோ தேவையில்லாமல் ஒரு அமைப்பை உருவாக்கி சட்டப்படி ஆரம்பிக்கப்பட்ட ராயல் என்பீல்ட் தொழிலாளர் சங்கத்திடம் பேச மறுத்து வருகிறது. \இதைத் தொடர்ந்து பல்வேறு தொழிலாளர்  விரோத நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருகிறது. போனஸ் வழங்க மறுத்து வருகிறது. சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் தயாராக இல்லை.

இந்நிலையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் எதற்கும் ஒத்துழைக்க தொழிற்சாலை நிர்வாகம் முன்வரவில்லை. கடந்த 24 செப்டம்பர் முதல் ஒரகடம் மற்றும் வல்லம் ராயல் என்பீல்ட் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள்  உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொழிலாளர் சங்கம், தொழிற்சாலை நிர்வாகம் ஆகியவற்றை அழைத்து தமிழக அரசின் தொழிலாளர் துறை முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உரிய நடவடிக்கையை  தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Royal Enfield Factory ,TNN ,Tripura , Royal Enfield ,Factory affair,, negotiated:
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு