×

கல்லட்டி மலைப்பாதையில் தாயை பிரிந்த கடமான் குட்டிமீட்பு

ஊட்டி: ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் தாயை பிரிந்த கடமான் குட்டியை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில்  புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதி என்பதால் வன விலங்குகளை தொந்தரவு செய்வதோ, வனப்பகுதிகளுக்குள்  அத்துமீறி செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி   கல்லட்டி மலைபாதையில் சாலையோரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் கடமான் ஒன்று  குட்டி ஈன்றுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற சில சுற்றுலா பயணிகள்  பார்த்துள்ளனர். ஆர்வமிகுதியால் கடமானை புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர்.

இதனால் அச்சமடைந்த கடமான், குட்டியை விட்டு விட்டு  வனத்திற்குள் சென்று விட்டது. இதனால் தாயை பிரிந்த நிலையில் கடமான் குட்டி,  செய்வதறியாது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், மான் குட்டியை மீட்டனர். தற்போது, அந்த  கடமான் குட்டி வனத்துறையினரின் பாதுகாப்பில் உள்ள நிலையில், கடமான் குட்டியை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர். ஊட்டி  கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடிய சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை தொந்தரவு செய்வது  போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mummy split ,Kallatti , Kallatti, mountain trail, moose
× RELATED விபத்துக்களை தவிர்க்க கல்லட்டி...