×

பூந்தமல்லியில் ஆய்வுக்கு வந்த கலெக்டரை மக்கள் முற்றுகை : புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு டோஸ்

சென்னை: பூந்தமல்லி நசரத்பேட்டை, வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு ஆய்வுக்காக வந்த மாவட்ட கலெக்டரை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, பாரிவாக்கம், சென்னீர்குப்பம், பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் குண்டும், குழியாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலைகளை சீரமைத்து தேவைப்படும் இடங்களில் பாலம் அமைப்பது குறித்தும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று அதிகாரிகளுடன் மேற்கண்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நசரத்பேட்டை, வரதராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் திடீரென கலெக்டரை முற்றுகையிட்டு, ‘‘வரதராஜபுரம் ஊராட்சியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் குடிநீரில்  கழிவுநீர் கலந்து வருகிறது. அருகே உள்ள குளத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை கேட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர், பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, தாசில்தார்புனிதவதி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை மக்களின் முன்னிலையிலேயே கண்டித்தார்.மேலும், நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய்களில் தனியார் லாரிகளில் கழிவுநீர் கொண்டு வந்து கொட்டுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் வீடுகளில் இருந்து கால்வாயில் விடப்படும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின்போது திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், அதிமுக ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் இருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : People siege ,Collector ,non-action officers , Poonamallee, Collector's Siege, Study
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...