×

லுக் அவுட் நோட்டீசை திருத்தும் முன்பாக சிவசங்கரனை டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரகசியமாக சந்தித்து பேசிய சிபிஐ உயரதிகாரி

சென்னை: ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு ஏற்ற வகையில் லுக் அவுட் நோட்டீசில் மாற்றம் செய்வதற்கு முன், அவரை டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சிபிஐ இணை இயக்குனர் ஒருவர் ரகசியமாக சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன். இவர் ஐடிபிஐ வங்கியில் 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த முறைகேடு வழக்கில் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர், நிர்வாக இயக்குனர்கள் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சிவசங்கரனுக்கு சிபிஐ ‘லுக் அவுட் நோட்டீஸ்’ எனப்படும் ‘தேடப்படும் நபர்’ நோட்டீசை பிறப்பித்து இருந்தது. இதன்படி, சிவசங்கரன் வெளிநாடு தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த வழக்கில் முதலில் கடுமை காட்டிய சிபிஐ, பின்னர் சிவசங்கரன் மீதான பிடியை திடீரென தளர்த்த தொடங்கியது. அவர் வெளிநாடு செல்வதற்கு உதவும் வகையில், லுக் அவுட் நோட்டீசின் அதிகாரத்தை நீர்த்து போகச்செய்ய, சிபிஐ அதில் சில மாற்றங்களை செய்தது. இதன் மூலம், அவர் வெளிநாடு தப்பிச் செல்லும்பட்சத்தில் விமான நிலையங்களில் அவரை கைது செய்வதற்கு குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்பட்டது. லுக் அவுட் நோட்டீசில் சிபிஐ மாற்றம் செய்தது பற்றிய அதிர்ச்சி தகவல், கடந்த மாதம் 21ம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிவசங்கரன் விவகாரத்தில் மீண்டும் புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் மீதான லுக் அவுட் நோட்டீசை திருத்தும் முன்பாக, டெல்லியில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கும், தெற்கு டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டல் அறைக்கும் சிபிஐ இணை இயக்குனர் ஒருவர் நேரில் சென்று ரகசியமாக சந்தித்து பேசி இருக்கிறார். இந்த ஓட்டலில் அறை எண் - 901ல் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகளை சிபிஐ கைப்பற்றி இருக்கிறது. மத்திய அரசின் பார்வைக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதி வியாபாரி மொயின் குரேஷியிடம் கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவுக்கும், சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து, இருவரும் பரஸ்பரம் லஞ்ச குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால், சிபிஐ.யின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டதால், இருவருக்கும் கட்டாய விடுப்பு கொடுத்து மத்திய அரசு வீட்டுக்கு அனுப்பியது. அதற்கு ஒருநாள் முன்பாகதான், சிவசங்கரனை இணை இயக்குனர்  சந்தித்த ரகசியம் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பு கடந்த மே செப்டம்பரில் நடந்திருக்கிறது. அதன் பிறகே, லுக் அவுட் நோட்டீசில் அவசரமாக மாற்றங்கள் செய்யப்பட்டு, சிவசங்கரன் வெளிநாடு செல்வதற்கு ஏற்ற வகையில் புதிய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஓட்டல் அறையில் சிபிஐ இணை இயக்குனருக்கும், சிவசங்கரனுக்கும் இடையே நடந்த ரகசிய பேரம் என்ன என்ற கேள்வியை அது கிளப்பி விட்டுள்ளது. சிவசங்கரனின் மோசடி வழக்கை முதலில் பெங்களூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தின் டிஎஸ்பி ரவீந்திர பதென்கல், இந்த அலுவலக பிரிவின் தலைமை அதிகாரி விஜயேந்திர பிதாரி ஆகியோர் விசாரித்து வந்தனர். லுக் அவுட் நோட்டீசை நீர்த்து போகச்செய்வதற்கு இவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சிவசங்கரன் செஷல்ஸ் நாட்டு குடியுரிமையை பெற்றுள்ளதால், அவருக்கு அந்நாட்டு குடியுரிமை சட்டத்தின்படி தூதரக பாதுகாப்பு வழங்கும்படி, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் சிபிஐக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதை டிஎஸ்பி ரவீந்திரா நிராகரித்துள்ளார். அதோடு, ‘‘சிவசங்கரனை வெளிநாடு செல்ல அனுமதித்தால், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டார். எனவே, லுக் அவுட் நோட்டீசில் அவர் வெளிநாடு செல்வற்கு அனுமதி அளித்து மாற்றங்கள் செய்யக் கூடாது’’ என விஜயேந்திராவும் எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தலைமைக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதுபோல், 2 முறை கடித பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி நோட்டீசில் மாற்றங்களை செய்யும்படி சிபிஐ மேலிடத்தில் இருந்து இந்த இரு அதிகாரிகளுக்கும் தொடர்ந்து நிர்பந்தங்கள்  அளிக்கப்பட்டு இருக்கிறது. அதை அவர்கள் திட்டவட்டமாக நிராகரித்ததால்தான், பெங்களூர் சிபிஐ அலுவலகத்தின் வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி பிரிவில் விசாரிக்கப்பட்டு வந்த சிவசங்கரன் வழக்கு, டெல்லியில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு -3க்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிபிஐ உயரதிகாரிகள் மட்டத்தில் உள்ள இணை இயக்குனர்கள், கூடுதல் இயக்குனர்கள், சிறப்பு இயக்குனர்கள் மற்றும் இயக்குனர்கள் சந்தித்து பேசக்கூடாது என விதிமுறை இருக்கிறது. இதை காற்றில் பறக்கவிட்டு, சிவசங்கரனை அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கே சென்று சிபிஐ இணை இயக்குனர் ஒருவர் சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. யாருடைய உத்தரவின் பேரில், சிவசங்கரனை இவர் சந்தித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சந்தித்தது உண்மையே சிவசங்கரன் விளக்கம்

டெல்லி நட்சத்திர ஓட்டலில் சிவசங்கரனை சிபிஐ இணை இயக்குனர் சந்தித்து பேசுவதற்கு முன்பாக, அவரை ஒருமுறை அலுவலகத்துக்கும் சென்று சந்தித்து பேசியுள்ளார்். இந்த சந்திப்பு நடந்ததை சிவசங்கரனும் மறுக்கவில்லை. ‘இந்த சந்திப்பு அதிகாரப்பூர்வமாக நடந்தது’ என அவர் விளக்கம் அளித்துள்ளார். இவருடைய மோசடி வழக்கை விசாரித்த இங்கிலாந்து உயர் நீதிமன்றம், ஐடிபிஐ வங்கியிடம் வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் 630 கோடியாக திருப்பிச் செலுத்தும்படி சமீபத்தில் சிவசங்கரனுக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : superintendent ,CBI ,star hotel ,Delhi ,Sivasankaran , Aircel, Sivasankaran
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...