×

டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்விலும் தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் இருக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் இருக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிக்கையில், ‘வரும் 11ம் தேதி நடைபெறும் இரண்டாம் தொகுதி முதனிலை தேர்வுகள் மற்றும் பின்னர் நடைபெறவுள்ள முதன்மை தேர்வுகள் ஆகியவற்றுக்கான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார். தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஆனால், இன்னமும் சில பாடங்களுக்கான தேர்வுகள் ஆங்கிலத்தில் தான் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் உறுதி செய்துள்ளது. ‘‘தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட சில பாடங்களுக்கு மட்டுமே ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் தயாரிக்கப் படுகின்றன’’ என்று தேர்வாணைய அதிகாரி சுதன் கூறியுள்ளார்.இது அப்பட்டமான பொய்.இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழ்நாட்டு அரசுப் பணிக்கு நடத்தப்படும் எந்த போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் அவை கண்டிப்பாக தமிழில் நடத்தப்பட வேண்டும். அதை செய்யாமல் தமிழுக்கு துரோகம் இழைப்பதையும் அந்த உண்மைகளை சுட்டிக்காட்டினால் அதை அவதூறு என்று பழி போடுவதையும் தமிழ் உணர்வாளர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

இந்தப் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு இளம் அதிகாரிகளும் நேர்மையானவர்கள். அவர்கள் ஆணையத்தின் இழந்த பெருமையை மீட்கும் பணிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, தமிழுக்கு எதிரானவர்களின் கைகளில் சிக்கிய பொம்மைகளைப் போல ஏற்கனவே கூறிய தகவல்களை மாற்றிப் பேசுவதும் பொய்யுரைப்பதும் கூடாது.
அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட எந்த பாடமாக இருந்தாலும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதற்கான வினாக்கள் தமிழ், ஆங்கில மொழிகளிலும் கேட்கப்படும் என்ற நிலையை ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TNPCC ,Ramadoss , examinations,conducted,TNPCC,questionnaire,Tamil,English,Ramadoss,insisted
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...