×
Saravana Stores

அமுதுண்ணாக்குடி குளத்தில் மீண்டும் உடைப்பு : தண்ணீர் வெளியேறுவதால் பாசன விவசாயிகள் கவலை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடி குளத்தில் மீண்டும் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வெளியேறி வருவதால் பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர். சாத்தான்குளம்  ஒன்றியம், அமுதுண்ணாக்குடி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள  அமுதுண்ணாக்குடி  குளத்தை நம்பி 100க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இக்குளத்தை பருவமழை துவங்கும் முன்பே முறையாகத்  தூர்வாரி ஆழப்படுத்துமாறு விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.  இதனிடையே கடந்த 2ம்தேதி இரவு சாத்தான்குளம் பகுதியில் கொட்டித் தீர்த்த  கனமழையால் இப்பகுதியில் உள்ள கரையடிகுளம், அமராவதிகுளம், அமுதுண்ணாக்குடி  உள்ளிட்ட குளங்களில் பாதியளவுக்கு தண்ணீர் தேங்கியது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில்  அமுதுண்ணாக்குடி குளக்கரையில் நேற்று முன்தினம் திடீரென உடைப்பு  ஏற்பட்டது. இதை பார்த்து பதறிய விவசாயிகள் தற்காலிகமாக சீரமைத்து குளத்தில் இருந்து  தண்ணீர் வெளியேறாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். ஆனால், நேற்று குளத்தின் உறிஞ்சி பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குளத்தில் இருந்த தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதாகவும் பாசன  விவசாயிகள்  புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இதுவரை யாரும் நேரில் வந்து பார்வையிடவோ, குளத்தின் உடைப்பை சீரமைக்கவோ முன்வரவில்லை என்றும் வேதனையுடன்  தெரிவித்தனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு  குளத்தின் உறிஞ்டி பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கவும் குளத்தில்  தண்ணீர் வெளியேறுவதை தடுக்க நிரந்தரத்தீர்வு காணவும் முன்வர வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pond ,Irrigation farmers , Pool, water, farmers
× RELATED எருக்கன் குளம் நிரம்பி வெளியேறிய நீரால் பல ஏக்கர் பயிர்கள் நாசம்