×

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம் மகள் தற்கொலைக்கு காரணம் என கருதி ஓய்வுபெற்ற ஆசிரியர் வெட்டிக்கொலை: முன்னாள் போலீஸ்காரர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ் (59).  கீழ வைப்பாறு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு  பெற்றவர். இவர் நேற்று காலை 11,30 மணியளவில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மத்திய ரிசர்வ் போலீசில்  பணியாற்றி ஓராண்டுக்கு முன்னர் விருப்ப ஓய்வு பெற்ற தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தை சேர்ந்த பிரான்சிஸ் (52) என்பவர், அந்தோணி துரைராஜை மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்து வந்தார்.முன்னால் சென்றுகொண்டிருந்த அந்தோணி துரைராஜின் பைக் மீது தனது பைக்கால் பிரான்சிஸ் மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவரை, மறைத்து வைத்திருந்த அரிவாளால்  சரமாரியாக வெட்டினார். இதைக்கண்டு ஆவேசமடைந்த அக்கம் பக்கத்தினர் பிரான்சிசை நோக்கி கற்களை வீசியுள்ளனர். இதையடுத்து அவர் அங்கிருந்து பைக்கில் ஏறி தப்பிச் சென்றார்.  உயிருக்கு போராடிய அந்தோணி துரைராஜை  அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அந்தோணி துரைராஜூம், பிரான்சிசும் நீண்டகால நண்பர்கள். தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த பிரான்சிஸ்சின் மகள் வினோ (22)  கடந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதற்கு அந்தோணி துரைராஜ்தான் காரணம் என்று நினைத்த பிரான்சிஸ், அவரை நேற்று வெட்டிக் கொன்றது விசாரணையில்  தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த தாளமுத்துநகர் போலீசார், தப்பியோடிய பிரான்சிசை நேற்று இரவு கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bridge ,policeman ,Thoothukudi , Veteran teacher,Thoothukudi bridge, Former ,arrested
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!