×

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கியூ-ஆர் கோடு பயன்பாட்டை கண்காணிக்க சிறப்பு குழு: ஆய்வுக்கு ஏற்பாடு செய்ய சிஇஓக்களுக்கு உத்தரவு

சேலம்: அரசு பள்ளிகளில் வகுப்பெடுக்கும் ஆசிரியர்களின் கியூ-ஆர் கோடு பயன்பாட்டை கண்காணிக்க சிறப்பு குழு ஆய்வு நடத்துகிறது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு  சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக, நடப்பாண்டு 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி  புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாட தகவல்கள் மட்டுமின்றி, பாடம் நடத்தும் முறைகளிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பல பாடங்களுக்கு கியூஆர் கோடுகள் வழங்கப்பட்டு, அதன்மூலம் பாடம் தொடர்பான தெளிவுரை வழங்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பாடம்  நடத்தும்போது, தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் அதனை ஸ்கேன் செய்து, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பாடபுத்தகங்களில் உள்ளதை விட கூடுதலாக பல மடங்கு தகவல்களை மாணவர்கள் பெற முடியும். இதனிடையே, பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் கியூ-ஆர் கோடு  பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனையடுத்து, ஆசிரியர்களின் கியூ-ஆர் கோடு பயன்பாட்டை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்ட கூடுதல் இயக்குநர், அனைத்து சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய பாடத்திட்டத்தில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ-ஆர் கோடு மூலம்,  மாணவர்களிடம் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும், அரசு பள்ளி ஆசிரியர்கள் இதனை முழுமையாக பயன்படுத்துகிறார்களா?  என்பது குறித்தும் ஆய்வு  செய்யப்படவுள்ளது. இதற்கென சிக்‌ஷா குழுவைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்  மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : public school teachers ,CEOs , Special,Monitoring:,Directive ,conduct research
× RELATED தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000...