×

நிர்மலாதேவி வழக்கில் உயர்பொறுப்பில் உள்ளவர்களை காப்பாற்ற முயற்சி : முருகன் மனைவி ஆவேசம்

மதுரை,:  கல்லூரி மாணவிகளை நிர்மலாதேவி பாலியலுக்கு அழைத்த வழக்கில், உயர்பொறுப்பில் உள்ளவர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாக பேராசிரியர் முருகன் மனைவி சுஜா தெரிவித்தார்.கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலை. பேராசியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கவர்னர் நியமித்த சந்தானம் கமிஷன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், நிர்மலாதேவியின் வாக்குமூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்குமூலத்தில் அவர், தனக்கு இந்து அறநிலையத்துறை அதிகாரி உள்பட பலருடன் நெருக்கமான தொடர்பு இருந்ததாகவும், முருகன், கருப்பசாமி தூண்டுதலின்பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகாரை முருகன், கருப்பசாமி மறுத்தனர். மரண பயத்தை தூண்டி நிர்மலாதேவியிடம், சிபிசிஐடி போலீசார் பொய்யான வாக்குமூலம் வாங்கியதாக முருகன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக மதுரை ஒத்தக்கடையில் வசித்து வரும் பேராசிரியர் முருகன் மனைவி சுஜா நேற்று கூறியதாவது:

ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கு பொய்யாகவே போய் கொண்டிருக்கிறது. சிபிசிஐடியின் பொய்யான கதையே வாக்குமூலம். இது நிர்மலாதேவியை மிரட்டி வாங்கப்பட்டது என்பதை விட, அவரை படிக்க கூட விடாமல் கையெழுத்து வாங்கினர் என்பதே உண்மை. இந்த வழக்கில் பெரிய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என நிர்மலாதேவி முதலில் வாட்ஸ்அப்பில் பேசியதற்கும், இந்த வாக்குமூலத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் உள்ளது. முருகனும், கருப்பசாமியும் தான் முழுக்க, முழுக்க காரணமென்றால், யார் மூலம் நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து உள்ளது? பெரிய விஐபியை காப்பாற்ற இந்த 3 பேருடன் வழக்கை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
என் கணவரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் கமிஷன் அறிக்ைகயை ஏன் இன்னமும் வெளியிடவில்லை. வழக்கை முடிவு செய்தபிறகே விசாரணையை துவக்கியுள்ளனர். இவ்வளவு அநீதி இழைப்பவர்கள், எங்கள் குடும்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பார்களா? எங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது. வழக்கு போகும் போக்கைப் பார்த்தால் பயமாக உள்ளது. வழக்கு விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கு தொடர்பாக, திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்று மூவரிடமும் அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கில் தொடர்புடைய குற்றங்கள் குறித்து விளக்கினார். அப்போது, மூவரது வழக்கறிஞர்களும் சேர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் இருப்பதால், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி, வழக்கை விரைவாக முடிக்க, ஒரு நாளைக்கு 2 அல்லது 3க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டும். சாட்சிகளை விசாரிக்காமல் இருப்பதால், வழக்கில் தொய்வு ஏற்படும் என்றனர். இதனிடையே, மூவர் மீதும் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, விளக்க கூடுதல் நேரம் வேண்டும் என அரசு வழக்கறிஞர் கேட்டார். இதனையடுத்து வரும் 8ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி லியாகத் அலி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murugan , College students, Nimalmela Devi, Murugan, Karuppasamy
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்