×

வங்கிக்கடன் மோசடி வழக்கில் திருப்பம் சிவசங்கரன் 630 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும்: இங்கிலாந்து கோர்ட் அதிரடி

புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிய ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.630 கோடி செலுத்த இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் அதிபர் சிவசங்கரன். தமிழகத்தை சேர்ந்த இவர் செஷல்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்தின் வெர்ஜின் தீவில் ‘ஏக்செல் ஷன்சைன் லிமிடெட்’ என்ற நிறுவனத்தையும்,  பின்லாந்தில் ‘விண்ட் விண்ட் ஒய்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஏக்செல் ஷன்சைன் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் ஐடிபிஐ வங்கியில் கடந்த 2010ம் ஆண்டு சிவசங்கரன் ரூ.322 கோடி கடன் பெற்றார். விண்ட்  விண்ட் ஒய் நிறுவனத்தின் பெயரில் கடந்த 2014ம் ஆண்டு ரூ.523 கோடி கடன் பெற்றார். ஆனால், இந்த கடனை சிவசங்கரன் திருப்பிச் செலத்தவில்லை. வங்கிகளில் மிகப்பெரும் தொகையை கடனாக பெற்ற தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி ஆகியோர் கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றனர்.

இதையடுத்து, வங்கி கடனை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஐடிபிஐ வங்கியில் வாங்கிய இரு கடன்களை திருப்பிச் செலுத்தாத சிவசங்கரன் மீதும்  சிபிஐ கடந்த ஏப்ரல் 13ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. மேலும், இவருக்கு முறைகேடான முறையில் கடன் வழங்கியதில் உடந்தையாக செயல்பட்ட ஐடிபிஐ வங்கியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.ராகவன், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் கரத்,  துணை நிர்வாக இயக்குனர்கள் பி.ேக.பத்ரா, மெல்வின் ரெகோ, யாத்வத்கர் மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் 3 தனி இயக்குனர்களையும் எப்ஐஆரில் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.  இங்கிலாந்தில் நடத்தும் நிறுவனத்துக்கு வாங்கிய கடனை சிவசங்கரன் திருப்பிச் செலுத்தாததால், அவர் மீது லண்டன் உயர் நீதிமன்றத்தில் ஐடிபிஐ வங்கி வழக்கு தொடர்ந்தது. இந்த வங்கியின் சார்பில் லண்டனில் உள்ள ‘டிஎல்டி எல்எல்பி’ என்ற சட்ட நிறுவனம்  இந்த வழக்கை நடத்தியது. இந்த பிரபல நிறுவனம்தான் இந்தியாவில் உள்ள 13 வங்கிகளின் சார்பில் வழக்கை நடத்துகிறது. விஜய்  மல்லயைாவின் வங்கி மோசடி வழக்கையும் இந்த சட்ட நிறுவனம்தான் நடத்துகிறது.

 இந்த வழக்கில் நீதிபதி ஆண்ட்ரு பேக்கர் வழங்கிய தீர்ப்பில், ‘‘ஐடிபிஐ வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.630 கோடியை சிவசங்கரன் செலுத்த வேண்டும். ஐடிபிஐ வங்கி லண்டனில் வழக்கு நடத்தியதற்கான செலவுத்தொகை  ரூ.26 லட்சத்தையும் சிவசங்கரன் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதையடுத்து, வங்கிக்கு செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் செலுத்த சிவசங்கரன் ஒப்புக் கொண்டுள்ளார். வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசங்கரனுக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தா தலைமையிலான குழு, பல திருத்தங்களை செய்து நீர்த்து போகச் செய்து, அவர் வெளிநாடு தப்பிச்  செல்ல உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இத்தகவல் கடந்த மாதம் 21ம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிவசங்கரனுக்கு உத்தரவிட்டது போலவே, விஜய் மல்லையா மீதான வங்கி கடன் மோசடி வழக்கிலும் லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivasankaran ,UK , bank fraud , Sivasankaran , 630 crores
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து