×

தொகுதிக்கு 20 ஆயிரம் கள்ளஓட்டு போட அதிமுக திட்டம் வீடுவீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க திமுக வலியுறுத்தல்: சென்னை தேர்தல் அதிகாரியிடம் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ புகார் மனு

சென்னை: வர இருக்கும் தேர்தலில் பூத் சிலிப் பயன்படுத்தி தொகுதிக்கு 20 ஆயிரம் கள்ள ஓட்டு போட அதிமுக திட்டமிட்டு இருப்பதால் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரியிடம் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் நேற்று சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:
தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர் பெயரை நீக்க நாங்கள் மனு தந்தால் அதிகாரிகள் ஏற்க மறுக்கிறார்கள். சேப்பாக்கம் தொகுதியில் நாங்கள் வீடு வீடாக சென்று இரட்டை பதிவு, முகவரி மாற்றம், இறந்தவர்கள், புதிய வாக்காளர்கள் பற்றிய பட்டியல் தயாரித்துள்ளோம். அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.
 எங்கள் மாவட்டத்தில் சேப்பாக்கம் தொகுதியில் இரட்டை பதிவு, முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள் என்று 14 ஆயிரத்து 191 பேரும், அண்ணா நகரில் 17 ஆயிரத்து 501 பேரும், மயிலாப்பூரில் 11 ஆயிரத்து 796 பேரும், ஆயிரம் விளக்கில் 10 ஆயிரத்து 316 பேரும், தியாகராய நகரில் 16 ஆயிரத்து 238 பேரும் உள்ளனர்.

தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை தேவையில்லை. ஆனால் தற்போதுள்ள பட்டியலில் உள்ள அனைவருக்கும் பூத் சிலிப் வழங்கப்பட்டு விடும். அந்த சிலிப்பை வைத்து வாக்களிக்க முடியும். இதனால் ஆளும் கட்சியினர் முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்களின் பூத் சிலிப் வைத்து தாராளமாக கள்ள ஓட்டு போட முடியும்.  தொகுதிக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர். எனவே வீடு வீடாக சென்று, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று முறையாக ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி வாக்காளர் பட்டியலை குழு அமைத்து சரிபார்ப்பதாக உறுதி அளித்துள்ளார். 2 வாரத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கா விட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,house ,Chennai , Kallottu, Chennai Election, J. Anbanjan MLA
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...