×

காய்ச்சல் ஏற்பட்டவுடன் சிகிச்சை மேற்கொண்டால் 100% உயிரிழப்பை தவிர்க்கலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: காய்ச்சல் ஏற்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டால்  100 சதவீதம்  உயிரிழப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.சென்னை ராயப்பேட்டை பார்டர் தோட்டம் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு வீடாக சென்று  டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டார். அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்திடவும் 100 சதவீதம் உயிரிழப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திடவும் சுகாதாரத்துறை தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதை முன்னிட்டு சீதோஷணநிலை காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்நோயளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவற்றில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தமிழகத்தில்  காய்ச்சல் பரவுவதை முற்றிலும் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 1200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.  ‘‘எலிசா’’ முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் 31ல் இருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இது சீதோஷண நிலை மாற்றத்தல் ஏற்படக்கூடிய ஒரு சாதாரண நோயாகும்.  

காய்ச்சல் மற்றும் கடுமையான தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்து 5 நாள் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் மட்டுமே அதி தீவிர சிகிச்சை தேவைப்படும்.  எனவே, பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகளை கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். நிலவேம்பு குடிநீர் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு இயற்கையாக காய்ச்சல் குணமடைய ஊக்குவிக்கப்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டால்  100 சதவீதம்  உயிரிழப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி(வடக்கு) வட்டார துணை ஆணையர் திவ்யதர்ஷினி, அரசு உயர்அலுவலர்கள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Wijepaskar , The fever, Minister Vijayapaskar
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்