×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அவமதிப்பு வழக்கில் சிபிஐ இணை இயக்குநருக்கு நோட்டீஸ்

மதுரை: தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் அர்ஜூனன், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மரிய ஜேசுஜோயல் ராஜா உள்ளிட்ட சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். ஓய்வு பெற்ற ஏடிஜிபி அலெக்சாண்டர், ஸ்டெர்லைட் நிறுவனத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகிறார். இதனால் ராணுவத்தை போன்ற பாதுகாப்பு நடைமுறை அங்கு உள்ளது. இவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் நல்ல தொடர்பு உள்ளது.

மே 22, 23ல் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் ஓய்வு ஏடிஜிபி அலெக்சாண்டருக்கு முக்கிய பங்கு உள்ளது. பல போலீசார் சீருடை இல்லாமல் இருந்தனர். இவர்களால்தான் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடந்தது. பல அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவே, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென ஏற்கனவே மனு செய்திருந்தேன். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றியது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறியிருந்தது. ஆனால், சிபிஐ தரப்பில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள், அதற்கு காரணமான போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.

எனவே, ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாத சிபிஐ இணை இயக்குநர் ப்ரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர், மனு குறித்து சிபிஐ இணை இயக்குநர் ப்ரவீன் சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : co-director ,CBI ,gunfight ,Thoothukudi , Thoothukudi gunfight, CBI co-director, notices
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...