நாகர்கோவிலில் திறக்கப்படாத புதிய கழிவறைகள் : தூய்மை இந்தியா திட்ட நிதி வீண்

நாகர்கோவில் : நாகர்கோவில் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிவறைகள் திறக்கப்படாமல் இருப்பது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. மத்திய அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே இந்த நிலையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. பிரதமர் மோடியின் மிகப்பெரிய திட்டமாக கருதப்படுவது தூய்மை இந்தியா திட்டம் ஆகும். கடந்த 4 ஆண்டுகள் இந்தியா முழுவதும் 8.64 கோடி கழிவறைகள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதே பிரதமரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். ஆனால் குமரி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் பல இடங்களில் திறக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக நாகர்கோவில் நகராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பல கழிவறைகள் திறக்கப்படாமல் புதருக்குள் மூழ்கி கிடக்கின்றன. இவற்றில் நாகர்கோவில் 36 வது வார்டுக்கு உட்பட்ட கோட்டார் லாரி பேட்டை பகுதியிலும் கழிவறைகள் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளன. இங்கு ஆண், பெண்கள் என தனித்தனியாக தலா ரூ.15 லட்சம் செலவில் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த கழிவறைகள் கட்டப்பட்டு பல மாதங்கள் கடந்த பின்னரும் இன்னும் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை நகராட்சி ஆணையருக்கு நினைவூட்டு கடிதம் அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்பது இந்த பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

 இங்கு லாரி பேட்டை மட்டுமின்றி ஏராளமான வீடுகள் உள்ளன. குறிப்பாக அங்கன்வாடி மையம், நகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகமும் உள்ளது. லாரி பேட்டைக்கு மட்டும் ஏராளமான லாரி டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வந்து செல்கிறார்கள். இவர்களில் பலர் இயற்கை உபாதைகள் கழிக்க திறந்தவெளியை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதே போல் இந்து கல்லூரி எதிரில் உள்ள சரலூர் மாட்டு சந்தையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிவறை திறக்கப்படாமல் உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் திறந்த வெளியில் தான் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டி உள்ளது. இதனால் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தூய்மை இந்தியா திட்டம் தான் மத்திய அரசின் மிகப்பெரிய திட்டம் என்று, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பெருமையான கூறி வரும் நிலையில், அவரது தொகுதியிலேயே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் திறக்கப்படாமல், மத்திய அரசின் நிதி வீணடிக்கப்பட்டு இருப்பது மக்களிடையே மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் கூறி உள்ளன.  எனவே நாகர்கோவில் நகராட்சி கமிஷனர் சரவணக்குமார், இதில் கவனம் செலுத்தி நாகர்கோவில் நகரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறக்கப்படாமல் உள்ள கழிவறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.

பணம் வழங்காமல் இழுத்தடிப்பு

இது தொடர்பாக நாகர்கோவில் நகராட்சி கான்ட்ராக்டர்கள் சிலர் கூறுகையில், நாகர்கோவில் பகுதியில் முடிக்கப்பட்ட பல கட்டுமான பணிகளுக்கு இன்னும் நிதி வழங்காமல் கமிஷனர் சரவணக்குமார் இழுத்தடிப்பு செய்து வருகிறார். நகராட்சிக்கு வந்த புதிதில், மக்கள் இடையே தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதை மக்கள் பாராட்டினர். ஆனால் இப்போது நகராட்சிக்கான வருவாயை அதிகரித்து இருப்பதாக கணக்கு காட்டி உள்ள அவர், மக்கள் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் தான் இது போன்று பல கட்டிடங்கள் நகரில் திறக்கப்படாமல் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bathrooms ,Nagercoil , New bathrooms ,unlocked, Nagercoil
× RELATED நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குண்டு குழி சாலைகள் சீரமைக்கப்படுமா?