×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : விசாரணை நடத்தும் சி.பி.ஐ அதிகாரி சின்ஹா மீது குற்றச்சாட்டு

மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல்த்துறை மீது வழக்கு பதிவு செய்யாததால், விசாரணை நடத்தும் சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனன் உள்பட 7 பேர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு ஐகோர்ட் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதற்கு மாறாக சிபிஐ போலீசார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதும், என்,ஜி.ஓ. மீதும் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனன் உள்பட 7 பேர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறியதாவது; காவல்துறையினர் மீது வழக்குப்பதியாமல் சிப்காட் போலீசாரின் எப்ஃஐஆர்- ஐ வைத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆகையால் காவல்துறையினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யாதது நீதிமன்ற அவமதிப்பதாகும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக சிபிஐ இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gunfight ,Thoothukudi ,CBI ,Sinha , Thoothukudi gunfiret,CBI probe ,allegations against Sinha
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...