×

மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் விழுந்து விடிய விடிய தவித்த பெண் : 8 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்பு

பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண், இரவு முழுவதும் கிணற்றிலேயே தவித்த நிலையில் 8 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி உட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவரது மனைவி சுமதி(31). குழந்தைகள் இல்லை. அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்போது அங்குள்ள 50 அடி ஆழம் கொண்ட கிணற்றின் அருகே சுமதி சென்றபோது, எதிர்பாராத விதமாக, கிணற்றில் தவறி விழுந்தார்.

இதையடுத்து தன்னை காப்பாற்றும்படி உதவி கேட்டு சத்தம் போட்டார். ஆனால் இரவு நேரம் என்பதால், பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை. சுமதிக்கு நீச்சல் தெரியும் என்பதால், இரவு முழுவதும் கிணற்றில் நீந்தியபடியே இருந்தார். மனைவி தோட்டத்து வீட்டில் இருப்பார் என அவரது கணவரும் அவரை தேடவில்லை. நேற்று அதிகாலை 5 மணியளவில், கிணற்றின் வழியாக சென்ற பொதுமக்கள், சுமதியின் சத்தத்தை கேட்டு கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தனர். பின்னர், இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறை வீரர்கள், சுமதியை கயிறு கட்டி மேலே பாதுகாப்பாக மீட்டனர். 8மணி நேரம் கிணற்றுக்குள் தவித்த சுமதி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marantha Malli , Marantha Aalli, well, girl
× RELATED மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்தை நாசம் செய்த யானைகள்