×

ஆத்தூரில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 4.12 லட்சம் இழப்பீடு : கலெக்டர் ரோகிணி அறிவிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 4.12 லட்சம் இழப்பீட்டு தொகையை கலெக்டர் ரோகிணி வழங்கினார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தளவாய்ப்பட்டியை சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சாமிவேல். இவரது மனைவி சின்னப்பொண்ணு. இவர்களது கடைசி மகள் ராஜலட்சுமி (13), அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்த ராஜலட்சுமியை அதேபகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்கிற கார்த்தி (27), பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜலட்சுமியின் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கார்த்தியை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, கார்த்தி மீது போக்ஸோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கலெக்டர் ரோகிணி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆத்தூரில் நடந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது, ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், போக்ஸோ சட்டமும் பாய்ந்துள்ளது. அதே சமயத்தில், அவர் ஜாமீனில் வெளியே வராதபடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுமியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு, அரசு சார்பில் முதற்கட்டமாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. மேலும், தன் கண்முன்னே நடந்த இந்த கொடூர சம்பவத்தால் ராஜலட்சுமியின் தாய் சின்னபொண்ணு, கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவருக்கு உரிய கவுன்சலிங் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,’’ என்றார். இந்நிலையில் நேற்று மாலை, சிறுமியின் தாய் சின்னப்பொண்ணுவிடம், அரசு சார்பில் 4.12 லட்சம் இழப்பீட்டு தொகையை, கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Collector ,Athur ,Rohini , Attur, girl, collector
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...