×

தர்மபுரியில் சாலை விரிவாக்க பணிக்காக கிடா வெட்டி, பரிகார பூஜை நடத்தி சாமி சிலைகளை அகற்றிய அதிகாரிகள்

தர்மபுரி: தர்மபுரிசேலம் மெயின்ரோடு இலக்கியம்பட்டியில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினர் கிடா பலியிட்டு சுவாமி சிலைகள் அதிரடியாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி சேலம் மெயின் ரோட்டில் இலக்கியம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சாலை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே சுமார் 6 அடி உயரத்தில் 2 குதிரை, துப்பாக்கியுடன் காவலர் மற்றும் அம்மன் சிலை, நாகர் சிலைகள் இருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் சீரான போக்குவத்துக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் சாலையை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி, சாலை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான குதிரை, காவலர், நாகர், மாரியம்மன் சிலைகளை நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்தனர். பின்னர்,கிரேன் மூலம் அவை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலைகளை இலக்கியம்பட்டி ஏரிக்கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
சிலைகள் அகற்றுவதற்கு முன்பாக தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மாரியம்மனுக்கு ஆடு வெட்டி, நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பின்னர், அகற்றப்பட்ட சிலைகள் அருகே யாகம் நடந்தது. இதையடுத்து, ஒன்றன் பின் ஒன்றாக சிலைகள் அகற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குலோத்துங்கன், உதவி பொறியாளர் பெருமாள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிலைகள் அகற்றும்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிலைகள் அகற்றும் பணி முடியும் வரை சுமார் 2 மணி நேரத்திற்கு தர்மபுரி சேலம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை பணியாளர்கள் மற்றும் போலீசார் போக்குவரத்தினை சீர்செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kita ,Dharmapuri , Dharmapuri, pirakara puja, officials
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...