×

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி, விரட்டியடித்து இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் செய்துள்ளனர். இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து நேற்று 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். இன்று அதிகாலை அவர்களில் சில மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்து உள்ளனர். அப்போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கியதோடு, துப்பாக்கி முனையில் வலைகள் மற்றும் மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை வெட்டி கடலில் எறிந்து விரட்டியடித்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர். இந்நிலையில், இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்ததாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க முடியாதவாறு இலங்கை கடற்படையினர் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களின் பாரம்பரிய இடங்களில் அச்சமின்றி மீன்பிடிக்க ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசு மற்றும் இலங்கை மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முறையில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,fishermen ,Katchatheevu ,Tamil , Katchatheevu, Tamil Nadu fishermen, Sri Lankan Navy
× RELATED கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்...