×

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை கூடுதல் விலைக்கு சரக்கு விற்றால் ஊழியருக்கு அபராதம்: ஜிஎஸ்டியுடன் வசூலிக்க அதிரடி உத்தரவு

வேலூர்: வரும் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டும். இதைபயன்படுத்தி ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யலாம் என்று கருதப்படுகிறது. இதை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்கள் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்படும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  அதாவது, மதுபான சில்லரை விற்பனை கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட (எம்ஆர்பி) கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ரூ1க்கு ரூ1000 முதல் ஜிஎஸ்டியுடன் சேர்த்து அதிகபட்சமாக ரூ10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளரை, மாவட்ட மேலாளர் விற்பனை குறைவாக நடக்கும் மதுபான கடைக்கு மாறுதல் செய்ய முதுநிலை மண்டல மேலாளருக்கு முன்மொழிவு அனுப்பிட வேண்டும். நிர்ணயித்ததைவிட கூடுதலாக ரூ20க்கு அதிகமான விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எம்ஆர்பி விலையை விட ரூ20 மற்றும் அதற்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை பணியாளர்களை உடனடியாக மதுபான கடையிலிருந்து விடுவிப்பு செய்து உரிய அபராத தொகையை வசூல் செய்த பின்னர் மாவட்டத்தில் உள்ள மதுபான கிடங்கில் பணியமர்த்த வேண்டும். 2வது முறையாக அதே கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை நடந்தால் அந்த கடைகளில் பணிபுரியும் அனைத்து மேற்பார்வையாளர்களையும் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பணியாளர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்கள் கிடங்கு பணியில் இருத்தல் வேண்டும். அங்கிருப்பவர்களை மதுபான கடைக்கு பணியிட மாற்றம் செய்வது குறித்து முதுநிலை வரிசை அடிப்படையில் அந்தந்த முதுநிலை மண்டல மேலாளர்கள் மூலமாகவே நடைபெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலாண்மை இயக்குனரின் இந்த அதிரடி உத்தரவால் டாஸ்மாக் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmill Management Director Circulars , Taskmask, Management Director, Circular
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4...