மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கு நிர்மலாதேவி வாக்குமூலம் பற்றி முருகன், கருப்பசாமி ஆவேசம்: கோர்ட்டில் பார்த்துக்கொள்வதாக பேட்டி

திருவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவி உட்பட 3 பேர், திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது முருகன், கருப்பசாமி ஆகியோர் நிர்மலாதேவி வாக்குமூலம் குறித்து ஆவேசமாக பேட்டியளித்தனர். நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாக முருகன் கூறினார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர். இதுதொடர்பான வழக்கு விருதுநகரில் இருந்து மாற்றப்பட்டு, திருவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிபிசிஐடி சார்பில் சாட்சிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பசாமி, முருகன் ஆகியோர் மனு செய்துள்ளனர். கடந்த 29ம் ேததி மூவரையும் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில், போதிய போலீசார் இல்லாததால், நேற்று ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நிர்மலாதேவி சிபிசிஐடி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், அரசு உயரதிகாரிகள், கல்வி அதிகாரிகள் உட்பட பல பேருடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததாகவும், முருகன், கருப்பசாமி கேட்டதன்பேரில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று பகல் 12.30 மணியளவில் மதுரை மத்திய சிறையில் இருந்து நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை, போலீசார் பலத்த பாதுகாப்புடன், திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது முருகன் அங்கிருந்த நிருபர்களிடம், ‘உங்களுடன் ஆதாரத்துடன் பேச வேண்டும்’ என்றார். ஆனால், போலீசார் அவரை பேசவிடாமல் அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் இன்று மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து மூவரும் 1.30 மணிக்கு திரும்பினர். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் வந்த நிர்மலாதேவியிடம், நிருபர்கள் வாக்குமூலம் தொடர்பாக கேள்விகளை கேட்டனர். ஆனால், அவர் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றார். மேலும் முருகன், கருப்பசாமியை யாரும் நெருங்க விடாமல் போலீசார் தங்களது வேன் வரை அழைத்துச் சென்றனர்.

பின் தொடர்ந்து சென்ற நிருபர்கள், ‘உங்கள் இருவரின் தூண்டுதலின்பேரில்தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக நிர்மலாதேவி வாக்குமூலத்தில் கூறியுள்ளாரே’ என கேட்டனர். அதற்கு முருகன் கூறுகையில், ‘‘பத்திரிகை மற்றும் வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் பொய். எங்களது தூண்டுதல்பேரில்தான் மாணவிகளை தவறான பாதைக்கு நிர்மலாதேவி அழைத்ததாக கூறுவது தவறானது. அந்த குற்றத்தை நான் செய்யவில்லை. வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வேன்’’ என்றார். கருப்பசாமி கூறுகையில், ‘‘பத்திரிகையில் வந்த செய்தி பொய். நிர்மலாதேவியை இருமுறை மட்டுமே பார்த்துள்ளேன்’’ என்றார். இதனையடுத்து மூவரும் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை கொண்டு செல்லப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>