×

‘பார்லே’ பிஸ்கட்டில் நெளிந்த புழுக்கள்: போலீசில் புகார்

அம்பர்நாத்: பார்லே நிறுவனத் தயாரிப்பு பிஸ்கட் பாக்கெட்டுக்குள் புழு இருந்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை அருகே உள்ள அம்பர்நாத்தின் சிவ்கங்கா நகரைச் சேர்ந்தவர் அசோக் தேசாய். இவரது மனைவி வீட்டருகில் உள்ள பட்டேல் ஆர் மார்ட் என்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று பார்லே நிறுவனத் தயாரிப்பான ‘பார்லே டாப்’ பிஸ்கட் பாக்கெட்களை வாங்கி வந்தார். மறுநாள் காலை அவர் பிஸ்கட் சாப்பிடுவதற்காக பாக்கெட்டை திறந்தபோது அதன் உள்ளே புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அசோக் தேசாயின் மனைவி உடனடியாக பட்டேல் ஆர் மார்ட் சூப்பர் மார்க்கெட்டுக்கு நேரில் சென்று புகார் அளித்தார். ஆனால், அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்தவர்களோ பார்லே தயாரித்து அனுப்பிய பிஸ்கட்களைத்தான் நாங்கள் விற்கிறோம்.

பிஸ்கட் பாக்கெட்டில் புழு இருந்ததால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும்பொருள் என்பதால், தான் பாதிக்கப்பட்டதைபோன்று மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் உடனடியாக அசோக் தேசாயின் மனைவி பார்லே நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்து விவரத்தை கூறினார். ஆனால், கம்பெனி தரப்பில் இருந்தும் சரியான பதில் அளிக்கப்படவில்லை. இதனால், அம்பர்நாத் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பார்லே நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். மேலும் புழு இருந்த பிஸ்கட் பாக்கெட் பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 'Barley' biscuit, worms and police complaint
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...