திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதை தென்மாநிலங்களின் அமைச்சர்கள் புறக்கணித்தனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்குகிறது.இதையொட்டி பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் எந்த மாநில அமைச்சரும் பங்கேற்கவில்லை. மாநிலங்களின் அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டுமே கலந்து ெகாண்டனர். இதுகுறித்து அறிந்த முதல்வர் பினராய் விஜயனும் கூட்டத்திற்கு வரவில்லை. இதையடுத்து ஆலோசனை கூட்டத்தை கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தொடங்கி வைத்தார்.