×

பாறை எரிவாயு திட்டங்களை செயல்படுத்தினால் நிலநடுக்கம் வர வாய்ப்பு : அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: பாறை எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதால் நிகழ கூடிய ஆபத்துகளை உணர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கிலாந்தின் பிளம்ப்டனில் பாறை எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் பாறை எரிவாயு எடுப்பதற்காக பூமியைத் துளையிடும் பணிகள் துவங்கி நடைபெற்றது. அதன்பின் கடந்த 5 நாட்களில் அப்பகுதியில் அடுத்தடுத்து பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 1.10 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கத. அப்பகுதியில் ஏற்பட்ட பீதியையடுத்து அங்கு துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதே போல கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கனடாவில் பாறை எரிவாயு இதைவிட அதிக சக்திகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு பாறை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் காவிரி பாசன மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களிலும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்துக்கு கடலில் 170 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதி உயர்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலேயே நிலநடுக்க பாதிப்புகள் ஏற்படும் நிலையில், பழங்காலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை நினைத்தாலே மிகவும் அச்சமாக உள்ளது என அறிக்கையில் கூறியுள்ள அன்புமணி, பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்தும், காவிரி டெல்டா மக்களின் உணர்வுகளை மதித்தும் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,Dhammani Ramadoss , If the rock gas projects are implemented, the possibility of an earthquake is possible: anbumani Ramadoss warning
× RELATED ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்