×

ஒரு புகைப்படம் கொடுத்த பரிசு குழந்தையுடன் பணியில் பெண் கான்ஸ்டெபிள்: உத்தரபிரதேச போலீசில் அதிரடி மாற்றம்

கோட்வாலி: உத்தரபிரதேச மாநிலத்தில், போலீஸ் ஸ்டேசனில் குழந்தையை உறங்கவைத்து பணியில் ஈடுபட்ட ஒரு பெண் காவலரின் புகைப்படம், அம்மாநில போலீசில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநில பெண் காவலர் ஒருவர், தனது 6 மாத குழந்தையை அருகில் உள்ள மேஜையில் உறங்கவைத்துவிட்டு பணியாற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் காவலருக்கு உயரதிகாரிகளும், சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கோட்வாலி போலீஸ் ஸ்டேசனில் கான்ஸ்டெபிளாகப் பணியாற்றும் அர்ச்சனாவுக்கு, அனிகா என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளது. வீட்டில் கணவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால், காவல்நிலையத்துக்கு குழந்தையை அழைத்து வந்து, மேஜையில் உறங்க வைத்துவிட்டு, தமது பணிகளைப் பார்த்து வந்தார்.

இதை புகைப்படமாக எடுத்த சக பெண் போலீசார், அதை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர். அந்த காவல்துறை உயரதிகாரி, அதை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் அந்த பெண் காவலரின் கடமையுணர்வைப் பாராட்டியுள்ளார். அவருக்கு மற்றொரு உயரதிகாரி, ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளார். இதற்கிடையே, ‘பெண் காவலரின் கடமையைப் பாராட்டுவதை விட, அனைத்து காவல் நிலையங்களிலும் ஆண், பெண் காவலர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் அறை ஒதுக்கித் தர உயரதிகாரிகள் முன்வர வேண்டும்’ என, சமூக வலைதளப் பயனாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, உத்தரபிரதேசம் டிஜிபி சிங்க், ‘‘விரைவில் காவலர்களுக்கு என்று பிரத்யேக குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்’’ என்று உறுதியளித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, பெண் காவலர் அர்ச்சனாவின் பெற்றோர் வசிக்கும் ஆக்ரா போலீஸ் ஸ்டேசனுக்கு பணி இடமாற்றமும் வழங்கி உத்தரவிட்டார். இந்தப் பணியிட மாற்றம் குறித்து அர்ச்சனா கூறுகையில், `‘நான் பெற்றோரையும், கணவரையும் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிறது.இந்தப் பணியிட மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார். ஒரு புகைப்படம், உத்தரபிரதேச போலீசில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதால், அனைத்து போலீசாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : photographer ,baby girl Constable ,Uttar Pradesh , photographer, girl,baby girl,Uttar Pradesh, police
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...