விருதுநகர் : கடந்த 7 மாதங்களாக சிறையில் இருக்கும் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் அளித்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு சரவணா பாண்டியன் என்பவரை திருமணம் செய்ததாக வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். கடந்த 2008-ம் ஆண்டில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலையில் சேர்ந்த நிர்மலாவுக்கு அறநிலையத்துறை அதிகாரி ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் தாம் பணிப்புரிந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி முன்னாள் செயலாளர் உடனும் நட்பாக இருந்ததாக நிர்மலாதேவி வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கணவன் மனைவியிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிய நேரிட்டு இருக்கிறது. இதன் பிறகு வேறு சில நண்பர்களின் பழக்கமும் நிர்மலாதேவிக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரியும் ஒருவர். அவர் மூலம் கவுரவ பேராசிரியர் வேலைக்கு நிர்மலா முயற்சித்தபோது தான் காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
முருகன் தமக்கு வேண்டியவரான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை நிர்மலாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன் பிறகு நிர்மலாவுடன் நட்பாக இருந்த கருப்பசாமியும், முருகனும் தங்களுக்கு மாணவிகளை அறிமுகம் செய்து வைக்குமாறு தொடர்ந்து நிர்மலாதேவியை வற்புறுத்தி வந்தனர். இவர்களுக்காக தான் கடந்த மார்ச் மாதத்தில் மாணவிகளை தொடர்புக்கொண்டு பேசியதாக நிர்மலாதேவி வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இதனால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் இவற்றையெல்லாம் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் என்று வலைதளங்களில் பரவிவந்த முக்கிய பிரமுகர்களின் பெயர்கள், தற்போது வெளியாகியிருக்கும் வாக்குமூலத்தில் எந்த இடத்திலும் இல்லை. இதனால் நிர்மலாதேவியின் வாக்குமூலம் மீது சமூக ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர் . இந்தசூழலில் நிர்மலாதேவியின் வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி