×

கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிப்பு : இடுப்பளவு தண்ணீரை கடந்து செல்லும் மக்கள்

ராமநாதபுரம்:  உச்சிப்புளி அருகே கிராமங்களுக்கு செல்லும் சாலை நீரோடையால் துண்டிக்கப்பட்டதால், பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். உச்சிப்புளி அருகே கடுக்காய்வலசை, சூரங்காட்டு வலசை, மானாங்குடி, நொச்சி ஊரணி உள்ளிட்ட 4 கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு ராமநாதபுரம், ராமேஸ்வரம் பிரதான சாலையில் இருந்து இணைப்பு சாலை உள்ளது. தற்போது பெய்த கனமழையால் இணைப்பு சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடுக்காய்வலசை கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கிதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியின்போது பாலம் அமைத்து சாலை பணியை செய்யாமல் தண்ணீரில் மூழ்கும் நிலையில் புதிய சாலை அமைத்துள்ளனர். இதனால் நீரோடையின் தண்ணீர் வெளியில் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் 5 கி.மீ தூரம் சென்று அருகில் உள்ள கிராமங்களை சுற்றி செல்லும் அவலம் கடந்த 2 மாதமாக தொடர்கிறது. மாவட்ட நிர்வாகமும் அப்பகுதியில் பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி புதிய பாலம் அமைத்து தர வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து கடுக்காய்வலசை பத்மநாபன் கூறுகையில், இப்பகுதியில் பாலம் இல்லாமல் சாலை அமைத்தது தவறு. ஆண்டுதோறும் மழை காலங்களில் மழைநீர் நிறைந்து விடுகிறது. கடந்த 5 ஆண்டுகாலமாக இப்பகுதிக்கு பாலம் அமைத்து தர பல்வேறு அரசு அதிகாரிகளிடமும், அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறினார். பள்ளி மாணவி ரிசானியாஜமின் கூறுகையில், சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால்  எங்களின் சீருடைகள் தண்ணீரில் நனைந்து விடுகிறது. தினமும் பள்ளிக்கு ஈரமான உடையுடன் செல்ல வேண்டியுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Road breakdown ,villages , Village, road, people
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...