×

ராஜபக்‌சே பதவியேற்ற முதல் நாளே இலங்கை அட்டூழியம் ராமேஸ்வரம், நாகையை சேர்ந்த 11 மீனவர், 2 படகு சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம், நாகையை சேர்ந்த 11 மீனவர்கள், 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று மாலை 5 மணியளவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியதுடன், மீனவர் கிறிஸ்து என்பவரது விசைப்படகில் சென்ற ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த ராஜபாண்டி (39), முருகன் (47), ஜேசு (36), உக்கிரபாண்டி (32), கோபால், ரூபன், ஜோசப் ஆகிய 7 பேரை படகுடன் சிறை பிடித்தனர்.

 மேலும், நாகப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள், ஒரு விசைப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களின் பெயர் விபரம் தெரியவில்லை. கைதானவர்களை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இன்று காலை யாழ்ப்பாணம் கடற்தொழில் மற்றும் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக ராஜபக்சே  நேற்று பொறுப்பேற்றார். இவர் பிரதமராக பொறுப்பேற்ற முதல் நாளான நேற்றே 11 மீனவர்கள், 2 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 20 மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களையும் சேர்த்து 31 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படையினர், நாங்கள் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தாலும் விரட்டியடிக்கின்றனர். எங்களுக்கு ஆதரவாக இந்திய கடற்படையும் இல்லை. ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து மீட்க முடியாத நிலையில், இப்போது கூடுதலாக 2 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மீன் பிடிக்க செல்லும் எங்களுக்கு இந்திய கடற்படை உதவியாக இருக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : resignation ,Rajapaksa ,Sri Lanka ,Rameswaram ,Nagam ,fishermen , Rajapaksa, Rameswaram, Nag, 11 fishermen, 2 boats captive
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...