×

இலங்கை குழப்பத்தால் ஆபத்து இந்திய பாதுகாப்பையும், ஈழத்தமிழர் நலனையும் உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய பாதுகாப்பையும், ஈழத்தமிழர் நலனையும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அதிபரின் நடவடிக்கையை  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ள நிலையில் இந்தியா அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு ஆதரவாக சில ஒப்பந்தங்களை செய்து கொள்ள முயன்றதால்தான் பதவி நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. திரிகோணமலைப் பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களை இந்தியாவுடன் செய்துகொள்ள  ரணில் விக்கிரமசிங்க விரும்பினார். அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இந்தியா வந்தார்.

ஆனால், அவர் டெல்லி புறப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என்று சிறிசேனா தடை விதித்ததாகவும், அதனால் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மட்டும் அப்போது கையெழுத்தானதாகவும் வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்பன்தோட்டா துறைமுகம் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில், அங்குள்ள திரிகோணமலை துறைமுகமோ, மாத்தளை விமான  தளமோ இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடக் கூடாது என்று சீனா விரும்புகிறது. அதற்காக நடத்தப்படும் சித்து விளையாட்டுகள் தான் இலங்கையில் இப்போது நடத்தப்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் ஆகும்.

இந்த உண்மைகள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு விட்டால் அது ராணுவரீதியாக  இந்தியாவை சீனா சுற்றி வளைப்பதற்கு சமமாகி விடும். எனவே, இந்த விஷயத்தில் இந்தியா அமைதி காப்பதை விடுத்து, இலங்கையில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரே பிரதமராக நீடிப்பதை உறுதிப்படுத்த  வேண்டும். அதன்மூலம் இந்திய பாதுகாப்பையும், ஈழத்தமிழர் நலனையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,India ,Ramadoss ,Eezham Tamils , Sri Lanka, Indian Defense, Central Government, Ramadoss
× RELATED இலங்கைத் தமிழர் முகாமில்...