5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் பார்முலா 1 கார் பந்தயத்தில் லூயிஸ் ஹாமில்டன் அசத்தல்

மெக்சிகோ சிட்டி: பார்முலா 1 கார் பந்தயத்தில், இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹாமில்டன் (மெர்சிடிஸ் அணி) 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மெக்சிகோ கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் 4வது இடம் பிடித்த ஹாமில்டன் 12 புள்ளிகள் பெற்றதையடுத்து, 2018ம் ஆண்டுக்கான பார்முலா 1 சீசனில் அவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியானது. இந்த போட்டியில் ரெட் புல் ரேசிங் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். பெராரி அணி வீரர்கள் செபாஸ்டியன் வெட்டல், கிமி ரெய்கோனன் முறையே 2வது மற்றும் 3வது இடம் பிடித்தனர். நடப்பு சீசனில் இதுவரை முடிந்துள்ள 19 பந்தயங்களின் முடிவில், ஹாமில்டன் (358 புள்ளி), வெட்டல் (294), ரெய்கோனன் (236) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். இன்னும் 2 பந்தயங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், இரண்டிலும் வென்று 50 புள்ளிகள் பெற்றாலும் வெட்டல் மற்றும் ரெய்கோனன் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு இல்லை.

இதையடுத்து, ஹாமில்டன் உலக சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக வெல்வது உறுதியாகி உள்ளது. அர்ஜென்டினாவின் ஜுவன் மேனுவல் பாங்கியோவின் சாதனையை (5 முறை உலக சாம்பியன் பட்டம்) ஹாமில்டன் சமன் செய்துள்ளார். இந்த வரிசையில் ஜெர்மனியின் மைகேல் ஷூமேக்கர் அதிகபட்சமாக 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார். பாங்கியோ, ஹாமில்டன் தலா 5 முறை வென்று 2வது இடம் வகிக்கின்றனர். பிரான்ஸ் வீரர் அலெய்ன் பிராஸ்ட், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் தலா 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று 3வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். நடப்பு சீசனின் 20வது பந்தயமாக பிரேசில் கிராண்ட் பிரீ தொடர் நவ. 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. கடைசி பந்தயமாக அபு தாபி கிராண்ட் பிரீ (நவ. 23-25) நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: