×

திருக்கனூர் அருகே பணிகள் முடிந்தும் திறக்கப்படாத சங்கராபரணி ஆற்றுப்பாலம் : பொதுமக்கள் அவதி

திருக்கனூர்:  திருக்கனூர் அருகே உள்ள கைக்கிலப்பட்டு, சுத்துக்கேணி இடையே சங்கராபரணி ஆறு உள்ளது. இந்நிலையில், சுத்துக்கேணி, லிங்காரெட்டிபாளையம், சந்தை புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கைக்கிலப்பட்டு வழியாக திருக்கனூருக்கு செல்ல வேண்டுமென்றால், சங்கராபரணி ஆற்றை கடந்துதான் வரவேண்டும். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள் 15 கி.மீ சுற்றிக் கொண்டு திருக்கனூர் வரவேண்டிய சூழல் இருந்து வந்தது. எனவே, சங்கராபரணி ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.34 கோடி செலவில் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேம்பாலம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, படுகை அணையுடன் பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறப்பு விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது. மேம்பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் மேம்பால திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திறப்பு விழா நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே பொதுமக்களின் கோரிக்கையேற்று இணைப்பு சாலை போடும் பணி நடைபெற்றது. தற்போது இணைப்பு சாலை போடப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை மேம்பாலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி பொதுப்பணித்துறை  உடனடியாக மேம்பாலத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sankaraparani River ,work ,disaster ,Tirukanur , Tirukkanur, Sagaraparani river bridge,public
× RELATED தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில்...