×

மாறவில்லை எனில் நம்மை காப்பாற்ற இனி வழி இல்லை: நித்யானந்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர்

தீபாவளி பண்டிகையின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு என்பது செயல்பூர்வமாக பார்த்தால், அமல்படுத்த முடியாத ஒன்று. அந்த கட்டுப்பாட்டின் காரணமாக காற்றின் தரம் சீராகும் என்ற சாத்தியக்கூறு இல்லை. இதனால், மாசு பிரச்சனை குறையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.  இரண்டு மணி நேரத்தில் இன்னும்  அதிகமாகத்தான் பிரச்ைன இருக்கும். பட்டாசு வெடித்தால் புகை வரும். அதற்கு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பட்டாசு விற்பனையைத்தான் கட்டுப்படுத்த வேண்டும். பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காக மாசுபடுத்தி தான் கொண்டாட வேண்டும் என்றால் நம்மை காப்பாற்றுவதற்கு வழி கிடையாது. இதை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக உணரும் காலம் வரத்தான் போகிறது.
நமது சடங்குகளும், பண்பாடுகளும் காலத்திற்கு தகுந்தாற்போல் மாற வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு பிறப்புரிமை என்று சொல்லக்கூடாது. பண்டிகையை ெகாண்டாடுகிற வழியை மாற்றிக் கொள்ள வேண்டும். மாசு சூழ்ந்த உலகில் பல மாற்றங்கள் அதற்கேற்ப வந்து கொண்டிருக்கின்றன. அது போல, நாமும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இந்த மாதிரி பட்டாசு வெடித்து கொண்டாடுவது என்பது உண்மையில் சொல்லப்போனால் மற்றவர்களை கொலை செய்வதற்கு சமம். ஆஸ்மா நோயாளிக்கோ, சுவாச பிரச்சனை உள்ள நோயாளிக்கோ பட்டாசு வெடிப்பதால் சாவதற்கான வாய்ப்புள்ளது. அந்த அளவு காற்று மாசு புகை உள்ளது. 2 நாட்கள் தான் என்று கூறினால், அந்த நேரத்தில் நோயாளிகள் உயிரிழந்தால் யார் பொறுப்பு. மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் நாம் கொண்டாட வேண்டும். புதுடில்லி மட்டுமின்றி நாட்டின் அனைத்து இடங்களில் காற்று மாசுபாடு இருக்கத்தான் செய்கிறது. சென்னையில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி எத்தனை மணிக்கு பட்டாசு வெடிப்பார்கள், எத்தனை மணிக்கு நிறுத்த போகிறார்கள் என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும். யாராவது பட்டாசு வெடிக்கிறார்கள் என்று ஒருவர் புகார் கொடுத்து, அங்கு போலீசார் வருவதற்குள் பட்டாசு வெடித்தவர் வீட்டிற்குள்ளே சென்று விடுவார். அப்படி இருக்கும் போது, போலீசாரால் என்ன செய்ய முடியும். போலீசார் அந்த பகுதியில் கிளம்பி சென்றவுடன் வீட்டிற்குள் சென்றவர் மீண்டும் வந்து பட்டாசு வெடிப்பார். இதனால் காற்று மாசுபாடு குறைய வாய்ப்பில்லை.

நமக்காகத் தான் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்ற புத்தி இருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லித் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. 8 வருடத்திற்கு முன்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெரிய அளவில் தமிழகத்தில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. அப்போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அந்த பிரசாரத்தில் தாக்கம் காரணமாக பட்டாசு வெடிப்பது குறைந்தது. அந்த சமயத்தில் காற்று மாசுபாடு குறைந்தது. காற்று மாசுபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அதை நாம் தான் உணர்ந்து இருக்க வேண்டும். கோர்ட் சொல்லித் தான் நடக்க வேண்டும் என்று கிடையாது. கோர்ட் மேல் நாம் பழியும் போடக் கூடாது. கடுமையான கட்டுப்பாட்டை விதித்து தான் பட்டாசு வெடிப்பது குறைந்து இருப்பது போன்ற நிலை இல்லாமல் மக்கள் உணர வேண்டும். காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால் மாணவர்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். அப்போது தான் காற்று மாசுபாட்டை தவிர்க்க முடியும். பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காக மாசுபடுத்தி தான் கொண்டாட வேண்டும் என்றால் நம்மை காப்பாற்றுவதற்கு வழி கிடையாது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nithyananda , No change, no way to save, no way, Nithyananda
× RELATED நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2...