×

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஸ்வைப்பிங் மிஷின் பயிற்சி: சென்னை மண்டலத்தில் நவ.1 முதல் அமல்

சென்னை: ஸ்வைப்பிங் மிஷின் பயன்படுத்துவது குறித்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். சென்னை மண்டலத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ஸ்வைப்பிங் மிஷின் பயன்பாடு  நடைமுறைக்கு வர உள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.4 லட்சம் முதல் ரூ.1 லட்சம் வரையில் நாள் தோறும் விற்பனை நடைபெற்று வருகிறது.  இதேபோல், நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி வரையிலும் விற்பனை நடைபெறுகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளை உடைத்து கொள்ளையடிப்பதும், ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.இது ஒருபுறம் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழகத்தில் உள்ள 5  மண்டலங்களிலும் அதிகாரிகள் தொடர் ஆய்வு பணியையும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் விலை வைத்து விற்பது, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் பணமற்ற பரிவர்த்தனையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வரும் டிசம்பர் இறுதிக்குள்  ஸ்வைப்பிங் மிஷின் திட்டத்தை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது.

இதற்காக வங்கிகளிடம் இருந்து விலைப்பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியிடம் இருந்து  விலைப்பட்டியல் கிடைத்ததையடுத்து தற்போது முதல் கட்டமாக 250 ஸ்வைப்பிங் மிஷின்களை நிர்வாகம் வாங்கியுள்ளது. மேலும், இந்த ஸ்வைப்பிங் மிஷின்களை பயன்படுத்துவது குறித்து சென்னை மண்டலத்தில் உள்ள  டாஸ்மாக் ஊழியர்களுக்கு பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மண்டலத்தில் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. முதல் கட்டமாக ஸ்வைப்பிங் மிஷின்கள் 200 முதல் 250 கடைகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பயிற்சியை கடை ஊழியர்களுக்கும்,  அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட வங்கி ஊழியர்கள் நேரடியாக சென்று வழங்கியுள்ளனர். 80 சதவீத பயிற்சி முடிந்துள்ளது. நவம்பர் 1ம் தேதிக்குள் சென்னை மண்டலத்தில் உள்ள கடைகளுக்கு இந்த இயந்திரங்கள்  வழங்கப்பட்டுவிடும். இதற்கான பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், சென்னையில் இது அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதன் செயல்பாட்டை வைத்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில்  அறிமுகப்படுத்தப்படும் என்றார். ஸ்வைப்பிங் மிஷின் பயன்பாட்டின் மூலம் கொள்ளை சம்பவங்கள் படிப்படையாக குறையும். இவ்வாறு கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Zone , Swiping Machine,Training, Taskmakers,Chennai Zone
× RELATED 45,477 திருக்கோயில் பணியாளர்களுக்கான...