×

போலி எம்சாண்டால் கட்டுமான தரத்தில் கேள்விக்குறி மதிப்பீட்டு சான்றிதழ் பெற்ற குவாரிகளில் மணல் எடுக்க அனுமதி

சென்னை: கட்டுமான பணிகளுக்கு மதிப்பீட்டு சான்றிதழ் பெற்ற குவாரிகளில் மட்டுமே மணல் எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில் அனைத்து பொறியியல் அரசு துறைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு பதிலாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரிஜினல் எம்சாண்ட் குவாரிகளை கண்டறிந்து அந்த குவாரிகளுக்கு  பொதுப்பணித்துறையின் மூலம் மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மதிப்பீட்டு சான்றிதழ் பெற்ற குவாரிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இருப்பினும், அரசு துறைகளிலேயே போலி எம்சாண்ட்  பயன்படுத்தி கட்டுமான பணி மேற்கொள்வதாகவும், இதனால், கட்டுமானத்தின் தரம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் குமாரி ஷீலா அனைத்து பொறியியல் துறைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மணல் தட்டுப்பாடு  காரணமாக கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு கவனம் எடுத்து ஆற்று மணலுக்கு பதிலாக  ஒரிஜினல் மாற்று மணல் (எம்சாண்ட் மணல்) சான்றிதழ் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி எம்சாண்ட் குவாரிகளில் நேரடியாக ஆய்வு செய்து, மணலை பரிசோதித்து அதன் பிறகே பொதுப்பணித்துறை முதன்மை தலைமை  பொறியாளர் தலைமையிலான மதிப்பீட்டு குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள 60 குவாரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதிப்பீட்டு சான்றிதழ் பெற்ற குவாரிகளின் மணலை மட்டுமே பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று  கூறப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த குவாரிகளில் எம்சாண்ட் வாங்கலாம் என்பது குறித்தும் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு அரசு துறைகளுக்கு பட்டியல் இணைத்து அனுப்பபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Phantom Employer , Fake Emzant, Quarry, Sand
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100