×

தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக புகார்களே வருவதில்லை: புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படுவதில்லை: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

சென்னை: கூடுதல் கட்டண வசூலில் ஈடுபடும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கும் மாணவர்கள் தொடர்பாக ரகசியம் காக்கப்படாததால் தான் மாணவர்கள் புகார் அளிப்பதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு  முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த  2 ஆண்டுகளாக நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்ைக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியமுறை மருத்துவம், ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட்  தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டது.

தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவ  மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து விட்ட நிலையில் தற்போது தனியார் இந்திய  முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக  ஒதுக்கீடு இடங்களுக்கு நேரடி  மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககத்தின்கீழ் அரசுக்கல்லூரிகளில் 390 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1,460 இடங்களும் உள்ளன. தனியார்  கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.    தனியார் கல்லூரிகளில் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான கட்டண நிர்ணய குழுவால்  நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு கல்வி கட்டணம் முறையே யோகா மற்றும் இயற்கை மருத்துவம்- 35 ஆயிரம், சித்த மருத்துவம்-40 ஆயிரம், ஆயுர்வேத மருத்துவம்-40 ஆயிரம், ஓமியோபதி- 55 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல்வேறு பெயர்களை சொல்லி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதே தமிழகத்தில் வாடிக்கையாக உள்ளது. இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட எந்த படிப்பும் இதற்கு விதிவிலக்கல்ல என்ற நிலையே  தொடர்கிறது. இந்நிலையில் தனியார் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு இடங்களின் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர் சில கல்லூரிகளின் நிர்வாகத்தை அணுகியபோது  20 லட்சம் நன்கொடை வழங்க வேண்டும். ஐந்தரை ஆண்டு படிப்புக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கல்விக் கட்டணம் என்றும் தெரிவித்துள்ளனர். அரசு நடத்தும் கலந்தாய்வில் சீட் தேர்வு செய்து, எங்கள் கல்லூரியில் சேர்ந்தால்  ஆண்டுக்கு 6 லட்சம் கட்டணம் என்று தெரிவித்துள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்தாலோ, அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர்ந்தாலோ ஒரே கட்டணம் தான் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பொருளாதார ரீதியில் பின்தங்கிய  பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, விண்ணப்ப கையேட்டில் குறிப்பிட்ட கட்டணத்தை மட்டுமே கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். விடுதி கட்டணம்,  போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்களை சேர்த்து ஆண்டுக்கு சற்று கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படலாம். ஆனால் ஆண்டுக்கு ₹6 லட்சம் கட்டணம் வசூலிக்க வாய்ப்பில்லை. அவ்வாறு வசூலிக்கபட்டால்  தனியார் கல்லூரி கட்டண நிர்ணய குழுவில் மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தனர். தலைவர், தனியார் கல்லூரி கட்டண குழு, கோட்டூர்புரம், சென்னை என்ற முகவரியிலோ, 044-24403048 என்ற தொலைபேசி  எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.   ஆனால் தனியார் கல்லூரி கட்டண நிர்ணய குழுவுக்கு மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே புகார்கள் வருகிறது.

இதற்கான காரணம் என்ன என்று கல்வியாளர்களிடம் கேட்டபோது கூறியதாவது: ஒரு மாணவரின் புகாரின் அடிப்படையில் கட்டண நிர்ணய குழு, குறிப்பிட்ட கல்லூரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், அதற்கான  ஆதாரத்தை கல்லூரி நிர்வாகம் கேட்டு பெறலாம். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு குறிப்பிட்ட கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டால், அந்த உத்தரவுக்கு எதிராக குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்துக்கு சென்றாலும்,  புகார் தெரிவித்த மாணவரின் புகார் கடிதத்தை கட்டண நிர்ணய குழு, நீதிமன்றத்தில் சமர்பித்து தான் ஆக வேண்டும்.  

இவ்வாறு கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளித்த மாணவர் குறிப்பிட்ட கல்லூரியில் படிப்பை தொடர முடியாது என்ற நிலை தான் எழுதப்படாத சட்டமாக உள்ளது. தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஒரே குழுவாக செயல்பட்டு  அந்த மாணவரை எந்த கல்லூரியிலும் சேர்த்துக்கொள்வதில்லை. வேறு மாநிலத்திற்கு சென்றாலும் குறிப்பிட்ட மாணவர் படிப்பை தொடர முடியுமா என்று தெரியவில்லை. புகார் அளிப்பவரின் ரகசியத்தை காக்கும் நடைமுறை  நம்மிடையே இல்லை. ரகசியம் காக்கப்படாததால் தங்கள் கல்விக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மாணவர்கள் புகார் அளிப்பதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கட்டுப்படுத்துவதில் கோட்டைவிட்ட அதிகாரிகள் பீதியூட்டும் டெங்கு; அச்சத்தில் பொதுமக்கள்

சென்னை8: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படாததால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சல் பூமியில் கடகரேகை பரவியுள்ள நாடுகளில் தொடங்கி தென் அரைக்கோளத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் பாதிப்ைப  ஏற்படுத்துகிறது. 1800ம் ஆண்டுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இந்த காய்ச்சல், 1950ம் ஆண்டு டெங்கு என்ற வைரஸ் கிருமியால் தான் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து முதலாவது டெங்கு  பாதிப்பு, 1953ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் கண்டறியப்பட்டது. குறிப்பாக மழை நீர் தேங்கும் நாடுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 100 பேர்  டெங்குவால் இறப்பது தொடர்கிறது.

டெங்கு காய்ச்சல் நன்னீரில் வளரும் ஏடிஸ் வகை கொசுவால்  பரவுகிறது. ஒரு  ஊரின் ஒரு பகுதியில் உள்ள வீட்டில், ஏதோ ஒரு வகையில் தண்ணீர் தேங்கி டெங்கு  காய்ச்சலை பரப்பும் கொசு வளர்ந்தால், அந்த ஊரின்  யாருக்கு வேண்டுமானாலும்,  டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் டெங்கு காய்ச்சல் தொடர்பாக  போதிய விழிப்புணர்வு  இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  இந்த ஆண்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்கிறது. குறிப்பாக சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

 கடந்த 2 வாரங்களுக்குள் சென்னையில் 6 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த அஸ்லாம், பெரம்பூரை சேர்ந்த ரிஸ்வான், மாதவரத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தக்‌ஷன்,  தீக்‌ஷா, எண்ணூரை சேர்ந்த சபிக் ஆகியோர் இறந்துள்ளனர். சென்னை ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்த பிரின்ஸ் உதயசேகர் சில நாட்களுக்கு டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளார். சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால்  ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அரசு ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் 94 பேர் காய்ச்சல் வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் அதில் 8 பேர்  டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 63 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை காய்ச்சல் வார்டில் 17 பேர் சி்கிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேருக்கு டெங்கு, ஒருவருக்கு  பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 131 பேர் காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று  வருகின்றனர். ஆனால் தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

10 லட்சம் அபராதம் வசூல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தொடர்ந்து இறப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வீடுகள், தொழிற்சாலைகளில் நீர் தேங்கியுள்ளது தொடர்பாக சோதனை நடத்தி, இதுவரை 10 லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அரசுக்கட்டிடங்களிலேயே பல இடங்களில் மழை நீர் தேங்கி டெங்கு பாதிப்பு ஏற்பட வழிவகுக்கிறது. புகார் தெரிவிக்கலாம்சென்னை தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணனுக்கு 044-25671875 (இணைப்பு எண்:5671) என்ற தொலைபேசி எண்ணிலும், hfsec@tn.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். டெங்குவுக்கான 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை  044-24350496 என்ற தொலைபேசி எண்ணிலும், 94443 40496, 87544 48477 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைகோர்க்காத அரசுத்துறைகள்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஏற்படும் ஒரு நிகழ்வு. ஏடிஸ் வகை கொசு நல்ல தண்ணீரில் வளரும் இயல்புடையது. வீடுகளில் குடிநீர், பிற தேவைக்களுக்காக தண்ணீர் சேகரித்து  வைக்கப்படுகிறது. இது சுகாதாரத்துறை, குடிநீர்வழங்கல் கழிவு நீர் அகற்றுதல் வாரியம், உள்ளாட்சித்துறை உள்பட சில துறைகள் இணைந்து செயல்படுத்த வேண்டிய ஒரு வேலை. தினசரி நீர் வினியோகம் செய்யப்படும்பட்சத்தில்  பொதுமக்கள் நீரை பாத்திரங்கள், டிரம்களில் சேகரித்து வைக்கப்போவதில்லை.

வீடுகளின் மேலே அல்லது காலியிடங்களில் தேவையற்ற பொருட்களை குவித்து வைப்பதால் அதில் மழை நீர் தேங்கி, டெங்கு கொசு வளர்கிறது. வீடுகளின் கூரையிலோ, ேதவையற்ற பொருட்கள், குப்பை, பழைய டயர்களை  சேகரித்து வைக்காமல் கண்காணிக்க வேண்டியது உள்ளாட்சித்துறையின் வேலை. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் இந்த பணியில் ஈடுபடவில்லை. மாறாக சுகாதாரத்துறை சார்பில், துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டு  வருகிறது. டெங்குவால் சிலர் இறந்ததும், சுகாதாரத்துறையினர் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். டயர்கள், தேவையற்ற பொருட்களில் சேர்ந்துள்ள தண்ணீரை அகற்றிவிட்டு, அவற்றில் தண்ணீர் சேராமல்  பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கி செல்கின்றனர். சிலருக்கு அபராதமும் விதிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : colleges , Private college, extra charge collection, academics
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...