தாராபுரம் அருகே பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்துகொன்ற மர்மவிலங்கு

தாராபுரம் : தாராபுரத்தில் பட்டியில் புகுந்த மர்ம விலங்கு அங்கிருந்த 12 ஆடுகளை கடித்து கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு வளர்ப்பு மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. பல இடங்களில் பட்டிகள் அமைத்து 30 முதல் 50 ஆடுகள் வரை வளர்க்கப்பட்டு வருகிறது. தாராபுரம் அடுத்த சகுனிபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தனது பட்டியில் 30 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல நேற்று முன்தினம் மேய்ச்சல் முடித்து இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

 இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்கு பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு 12 ஆடுகளின் குரல்வளையை கடித்து ரத்தத்தை குடித்தது. 3 குட்டி ஆடுகளை முழுவதுமாக தின்று விட்டு தப்பியது. காலையில் பட்டியை பார்வையிட சென்ற பொன்னுசாமி ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் கால்நடை துறையினர் இறந்து கிடந்த ஆடுகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

கடந்த 30 நாட்களில் உப்பாறு அணை பகுதி கிராமங்களான சகுனிபாளையம், கோவில்பாளையம், குள்ளாய்பாளையம், வேலாங்காட்டுபுதூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மர்ம விலங்குகள் கொடூரமாக தாக்கி 200 ஆடுகள் பலியாகி உள்ளன. தொடர்ந்து கால்நடைகளை மர்மவிலங்கு கடித்து கொல்வதால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த விலங்கை பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>