20 தொகுதி இடைத்தேர்தலை அதிமுகவுக்கு திராணி இருந்தால் உடனடியாக சந்திக்க வேண்டும்: திருநாவுக்கரசர் பேச்சு

சென்னை: திராணி இருந்தால் 20 தொகுதி இடைத்தேர்தலை அதிமுக உடனடியாக சந்திக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.  நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்ட, சிபிஐ இயக்குனரை மீண்டும் நியமிக்க ேகாரியும்,  மத்திய அரசை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் வெல்ல  பிரசாத், குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது: நாடு முழுவதும் சிபிஐ அலுவலகங்கள் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். சிபிஐ அமைப்பு என்பது முக்கிய புலனாய்வு அமைப்பு. மாநிலங்களில்  பிரச்னை வரும் போது, நீதிமன்றத்தில் நடக்கும் சில வழக்குகளில் உரிய நீதி கிடைக்கும் வகையில் சிபிஐ விசாரணைக்கு அனுப்பப்படும். அதன்படி, முதல்வர் எடப்பாடி மீதான ஊழல் வழக்கு கூட சிபிஐ விசாரிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் தனித்தன்மையுடன், சுயமாக செயல்படக்கூடிய ஒரு பிரிவு. இதன் இயக்குனராக இருக்கும் அலோக் வர்மாவை, நீக்கியுள்ளனர். அதற்கு காரணம் ரபேல் வழக்கை அவர் கையில் எடுத்ததுதான்  காரணம். பிரதமர் மோடி இதில் மாட்டிக்கொள்வார் என்பதால்தான் அவரை காப்பாற்ற சட்ட திட்டங்களை மதிக்காமல் இரவோடு இரவாக மாற்றியுள்ளனர்.

இதன் மூலம் சிபிஐ அமைப்பை சீர்குலைத்துள்ளனர். தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு எம்எல்ஏக்கள் இல்லை. மக்களின் விருப்பம் எல்லாம், இந்த தொகுதிகளில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான்.  மழையே இல்லாத தமிழகத்தில், மழையை காரணம் காட்டி இரு தொகுதி தேர்தலை தள்ளி வைத்தது போல, இந்த தேர்தலையும் தள்ளி வைக்கக்கூடாது. திராணி இருந்தால், இடைத்தேர்தலை அதிமுக உடனடியாக சந்திக்க  வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன், ராணி, கோபண்ணா, செல்வபெருந்தகை, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், கஜநாதன், கருணாமூர்த்தி, சிரஞ்சீவி, சந்திரசேகரன், அஸ்லாம் பாட்ஷா,  ஜி.கே.தாஸ், எர்ணஸ்ட் பால், எஸ்.கே.நவாஸ், நிலவன், ஜாக்கி, எஸ்.தீனா, ஹரிகிருஷ்ணன், பிராங்ளின் பிரகாஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,electors ,Thirunavukarar , 20 constituencies, AIADMK, Thirunavukkarar
× RELATED போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக ஆலோசனை கூட்டம்