×

அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது ஒட்டுக்கேட்க முடியாத போனை டிரம்ப் பயன்படுத்துகிறார்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பின் செல்போன்களை ரஷ்யா, சீனா ஒட்டு கேட்பதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. ‘யாராலும் ஒட்டு கேட்க முடியாத பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த செல்போன்களை டிரம்ப் பயன்படுத்துகிறார்’ என அது தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் செல்போன் உபயோகம் பற்றி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் புலனாய்வு கட்டுரை ஒன்று சில தினங்களுக்கு முன் வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 செல்போன்களை பயன்படுத்துகிறார். அதில் இரண்டு அரசு சார்பில் வழங்கப்பட்டவை. தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்ஐஏ) பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை. மற்றொன்று அவரது தனிப்பட்ட ஐபோன். தனிப்பட்ட விஷயங்களை பேச தனது ஐபோனைதான் அதிகம் பயன்படுத்துகிறார். சில நேரங்களில் இதில் முக்கிய விஷயங்களும், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கூட பேசப்படுகின்றன. இவற்றையெல்லாம் சீனாவும், ரஷ்யாவும் ஒட்டு கேட்கின்றன.

அமெரிக்காவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள சீனா, யார் மூலமாக அதிபர் டிரம்ப்பை சரிகட்ட முடியும் என இந்த போன் உரையாடல் ஒட்டு கேட்பு மூலம் ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இதை நிராகரித்துள்ள வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜோகன் ஷிட்லே, ‘‘அமெரிக்க அதிபரின் செல்போன் பயன்பாடு குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதிபரிடம் 3 செல்போன்கள் இல்லை. அரசு சார்பில் வழங்கப்பட்ட ஒரே ஒரு ஐபோன்தான் உள்ளது. அது மிகச்சிறந்த பாதுகாப்பு வசதியுடன் கூடியது. அரசின் தீவிர கண்காணிப்பில் உள்ளது’’ என கூறியுள்ளார்.

அட, போங்கய்யா...!

அதிபர் டிரம்ப் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘புலனாய்வு நிருபர்கள் என கூறிக்கொள்பவர்கள்,  எனது செல்போன் பயன்பாடு குறித்து நீண்ட போரடிக்கும் கட்டுரையை எழுதியுள்ளனர். அது தவறானவை. அதை திருத்துவதற்கு எனக்கு நேரம் இல்லை. அரசு போன்களை மட்டுமே நான் பயன்படுத்துகிறேன். அரசு சார்பில் வழங்கப்பட்ட ஒரே ஒரு செல்போனை மிகவும் அரிதாக பயன்படுத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trump , most protective features ,overwhelmed
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...