×

ஒகேனக்கல்லில் எங்கு திரும்பினாலும் ஜோராக நடக்கும் சரக்கு விற்பனை : சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைக்கும் அவலம்

பென்னாகரம்: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் திறந்த வெளியில் ஜோராக நடக்கும் மதுவிற்பனை சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைத்து வருகிறது. கர்நாடகாவில் உருவெடுக்கும் காவிரி தமிழகத்தில் அருவியாக ஆர்ப்பரித்து கொட்டும் பெருமைக்குரிய சுற்றுலாத்தலம் ஒகேனக்கல். தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அருவியில் குளித்து, ஆயில் மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மெயினருவி, தொங்குபாலம், சினிபால்ஸ், ஐவர்பாணி என்று இங்குள்ள இடங்கள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கிறது. அதே நேரத்தில் ஒகேனக்கல்லில் நடக்கும் அவலங்கள் சுற்றுலாப்  பயணிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக திறந்த வெளியில் ஜோராக நடக்கும் மதுவிற்பனை அனைத்து தரப்பினரையும் முகம் சுழிக்க வைக்கிறது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: ஒகேனக்கல்லுக்கு வருபவர்கள் அனைவரும் மீன்சமைத்து சாப்பிடுவதை மிகவும் விரும்புகின்றனர். ஆனால் மீன்வாங்கும் இடம், அதை வெட்டும் இடம், சமைக்கும் இடம் என்று ஒவ்வொரு இடத்திலும் சுற்றுலா பயணிகளை பெண்களும், சிறுவர்களும் பின் தொடர்கின்றனர்.

அனைவரிடம் சரக்கு வேண்டுமா? என்பதே அவர்கள் கேட்கும் முக்கிய கேள்வியாக உள்ளது. முதலைப் பண்ணை, மீன் அருங்காட்சியகம் என்று எங்கு சென்றாலும் இந்த தொல்லை தொடர்கிறது. பல இடங்களில் குடும்பத்தோடு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் மதுவிற்பனை திறந்த வெளிகளில் ஜோராக நடக்கிறது. இது குறித்து வாக்குவாதம் செய்வோரிடம், போலீசுக்கு எல்லாம் தெரியும். பேசாமல் நடையை கட்டு என்று விரட்டி விடுகின்றனர். மது விற்பனை தாராளமாக நடப்பதால், பலர் மது அருந்திவிட்டே பரிசலில் பயணிக்கின்றனர்.

மேலும் கார் பார்க்கிங் என்று கூறி 100 வசூலிக்கின்றனர். கார் பார்க்கிங் எங்கே? என்று கேட்டால் திறந்த வெளியை காட்டுகின்றனர். இது போன்ற அவலங்களால் பயணிகளின் உயிருக்கும், உடமைக்கும் உத்திரவாதம் இல்லாத நிலையே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தொடரும் அவலங்களுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்து மனஉளைச்சல் இல்லாமல் இயற்கை அழகை ரசிப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றுலா பயணிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hogenakkal, inventory, sales
× RELATED தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று...