×

நெல்லை டவுன் காவல் நிலையம் அருகே நகை கடையை உடைத்து 2 கிலோ தங்கம் கொள்ளை: முகமூடி அணிந்த நபர்கள் துணிகரம்

நெல்லை: நெல்லை டவுனில் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பிரபல நகை கடையை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். காவல் நிலையம் அருகே இந்த  துணிகர கொள்ளை நடந்துள்ளது. நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் மணிகண்டன் (35). இவர் டவுன் மேல ரதவீதியில் மதுரா ஜூவல்லர்ஸ் என்ற  பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் சங்கர் (33) பங்குதாரராக உள்ளார்.

நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து இரவு 11 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு ஷோ கேஸ்கள் நொறுங்கி கிடந்தது. தகவலறிந்து மணிகண்டன்,  அவரது தந்தை லட்சுமணன் மற்றும் சங்கர் ஆகியோர் வந்து பார்த்தனர். அதில் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம். இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த  கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கடப்பாரையால் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஷோ கேஸ் கண்ணாடியை கையால் குத்தி உடைத்துள்ளனர். இதில் கண்ணாடி குத்தி கொள்ளையர்களின் கையிலிருந்து வழிந்த ரத்தம்  கடை முழுவதும் சிதறி கிடந்தது. சிறிய நகைகள் எதையும் அவர்கள் எடுக்கவில்லை.

கடையில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் முகத்தை துணியால் மூடியிருப்பது தெரியவந்தது. கடையைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள், உள்ளூர்காரர்களே இந்த கொள்ளையில்  ஈடுபட்டிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டவுன் போலீஸ் நிலையம் எதிரே நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இன்று நடக்கும் திருமணத்துக்கான ஆர்டர் நகைகள் திருட்டு
நகை கடையில் இருந்த நகைகள் தவிர, திருமண ஆர்டரின் பேரில் செய்து வைத்திருந்த சுமார் 100 பவுன் நகையும் கொள்ளை போயுள்ளது. இதுகுறித்து உரிமையாளர் மணிகண்டன் கூறுகையில்,  நெல்லையில் நாளை (இன்று)  நடக்க இருந்த திருமணத்திற்கு செய்து வைத்திருந்த நகைகளை நேற்று இரவு வாங்க வருவதாக கஸ்டமர் கூறினார்கள். இதனால் இரவு 11 மணி வரை கடையை திறந்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை.  வெகுநேரம் ஆகிவிட்டதால் லாக்கரில் எடுத்து வைக்காமல் ஷோகேசில் வைத்து கடையை பூட்டிவிட்டு சென்றோம். இதை யாரோ நோட்டமிட்டு கொள்ளையடித்துச் சென்று விட்டனர் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelery shop ,town ,Nelli ,persons ,police station , Nellie Town Police Station, Jewelery Shop, Gold Robbery:
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி