×

ஏரி, குளங்கள், கல்குவாரிகளில் டெங்கு கொசுக்களை அழிக்க கம்பூசியா மீன்கள் விட முடிவு

வேலூர்: தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள், கல்குவாரிகளில் டெங்கு கொசுக்களை அழிக்க கம்பூசியா மீன்களை விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 10க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உட்பட அனைத்து அதிகாரிகளும் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பல இடங்களில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஒட்டுமொத்த சுகாதாரப்பணிகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து டெங்குவை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்ற புகார் உள்ளது. அனைத்து பகுதியிலும் டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நீர்நிலைகளில் இருந்து டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க ‘கம்பூசியா’ மீன்களை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:டெங்குவை பரப்பும் கொசுக்கள் நன்னீர் நிலைகளில் கொசு முட்டைகளை இட்டு செல்கிறது. ஒரு சில நாட்களில் இவை லார்வாக்களாக உருவாகி விடுகிறது.

இந்த லார்வா கொசுக்களாக உருவாகும் முன் இவற்றை உண்டு அழிக்கும் வகையில் கம்பூசியா மீன்களை நீர்நிலைகளில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏரி, குளம், கல்குவாரிகள், குட்டைகளிலும் கம்பூசியா மீன்களை விட்டால் போதும். ஒரு சில நாட்களில் குளங்களை சுத்தம் செய்வதுடன், கம்பூசியா மீன்களும் வேகமாக இனப்பெருக்கம் செய்து கொசு முட்டைகளை அழித்துவிடும். இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் உள்ள குளங்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை சேகரித்து வருகிறோம். டெங்கு கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக டெங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ள பகுதிகளில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dengue mosquitoes ,lake ,cliffs , Ponds, dengue,compassion fish
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!