×

இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு

சென்னை:அப்போலோ மூத்த டாக்டர்கள், லண்டன் டாக்டர் உட்பட இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் ஆறுமுகசாமி  ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு  காரணமாக கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி அப்ேபாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த  நிலையில் டிசம்பர் 5ம் தேதி திடீரென காலமானார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது புகைப்படமோ,  வீடியோவோ வெளியிடப்படவில்லை. மேலும், அப்போலோ நிர்வாகம் சார்பில் மட்டும் அவ்வப்போது அறிக்கை மட்டும் வெளியிடப்பட்டு வந்தது.

இதனால், ஜெயலலிதா மரணத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதை தொடர்ந்து  ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று ஆகஸ்ட் 7ம் ேததி அறிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி உத்தரவிட்டார். இந்த  ஆணையத்திற்கு 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கால அவகாசம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் விசாரணையை  முடிப்பதற்கு மேலும் காலஅவகாசம் தேவைப்பட்டதால் மீண்டும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த ஆணையம் சார்பில் 11 அரசு டாக்டர்கள், 38 அப்போலோ டாக்டர்கள், 17 அரசு அதிகாரிள், 11 சசிகலா உறவினர்கள் மற்றும் பணியாளர்கள், 17  அப்போலோ செவிலியர்கள், 7 ஆணையத்திற்கு மனு அளித்து சாட்சியம் அளித்தவர்கள் என மொத்தம் 115 பேரிடம் விசாரணை, மறு விசாரணை,  குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால், மேலும் 4 மாதம்  கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசிடம் விசாரணை ஆணையம் கடிதம் எழுதியது. இந்த நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம்  நேற்றுடன் முடியும் நிலையில், நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், நேற்று 4 மாதம் காலத்திற்கு கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஏற்கனவே, 115 பேரிடம் விசாரணை  முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அப்போலோ மருத்துவமனையில் மூத்த டாக்டர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சசிகலா தமிழக  அமைச்சர்கள் உள்ளிட்ட பலரிடம் வரும் வாரத்தில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arumugamasi Commission , Arumugamasi Commission, Apollo, Jayalalitha
× RELATED ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை...