×

மடியில் கனம் இல்லை என்றால் சிபிஐ விசாரணை எதிர்கொள்ள நடுங்குவது ஏன்?: எடப்பாடிக்கு திமுக கேள்வி

சென்னை: மடியில் கனமில்லை என்றால் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள பயந்து நடுங்கி ஓடுவது ஏன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர்  சுப்புலட்சுமி ஜெகதீசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும்  முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்ட அறிக்கை: சேலம் - குமாரபாளையம் - செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலையைப் பொறுத்தமட்டில், தேசிய நெடுஞ்சாலைகள் எப்படி சர்வதேச தரத்துடன் அமைக்கப்படுகிறது என்பதை  விளக்கி, அந்த சாலைப் பணிகள் சராசரி ஒரு கிலோ மீட்டருக்கு ₹ 5.65 கோடி என்ற அளவில்தான் செயல்படுத்தப்பட்டது என்று டி.ஆர்.பாலு தெளிவுபடுத்தி இருந்தார்.  இந்த 102 கி.மீ சாலையைப் பொறுத்தமட்டில் காவிரி ஆற்றில் ஒரு 4 வழி பாலம், 3 ரயில்வே மேம்பாலங்கள், 13 உயர்மட்ட மேம்பாலங்கள் (6 வழி), 9 புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.   எனவே தான், இந்த குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைப்புச் செலவு சராசரி செலவைவிட சற்று கூடுதலாக இருந்தது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் முதலீட்டில் அமைத்திடும்  நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் சர்வதேச தரத்துக்கு இணையானவை.

இந்த தர நிர்ணய அம்சங்கள் பற்றி 7 வருடங்களாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கும் பழனிசாமிக்குத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடானது. டெண்டர்களை முடிவு செய்யும் கோப்புகள் துறை அமைச்சரான பழனிசாமிக்கு வருவதில்லை என்றும், அதை ஸ்டீரிங் கமிட்டி, எவால்யுவேஷன் கமிட்டி ஆகியவைதான் முடிவு செய்கிறது  என்றும் அமைச்சர் தங்கமணி கட்டுக்கதை சொல்லியிருக்கிறார்.  துறை அமைச்சரான பழனிசாமி தலைமையிலான எம்பவர்டு கமிட்டியில் உள்ள துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், திட்ட இயக்குநர் மூவரும் டெண்டர்களை முடிவு செய்யும் ஸ்டீரிங்  கமிட்டி மற்றும் எவால்யுவேசன் கமிட்டியிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். துறை அமைச்சராக இருக்கும் பழனிசாமியின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டுப்பாட்டில்தான் இந்த 3 கமிட்டிகளும் இருக்கிறது என்ற உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல் அறிக்கை  விட்டிருப்பது அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறது.  மடியில் கனமில்லை என்றால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள பயந்து நடுங்கி ஓடுவது ஏன்? ஊழல் வழக்கிலிருந்து எப்படியாவது தப்பி விடலாம் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்வது  ஏன்? ஆகவே, முதல்வர் மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும். சம்பந்திக்கு டெண்டர் விட்டு ஊழலில் மாட்டியுள்ள பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் சட்டத்தின் முன்பு நிச்சயம் தண்டிக்கப்பட்டு சிறைக்குச் செல்வது உறுதி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI , Why,CBI lagging, no lapse?
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...