அதிபர் சிறிசேனாவை கொல்ல ‘ரா’ முயற்சி? தொலைபேசி ஆதாரங்களை திரட்ட சீனா உதவியை நாடியது இலங்கை

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொல்ல முயற்சி நடந்ததாக கூறப்படுவது தொடர்பான ஆதாரங்களை திரட்ட சீனா உதவியை அரசு நாடியுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா. இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக சமீபத்தில் இவர் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டது. மேலும், தொலைபேசி மூலம் பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட சிறிசேனா, ‘ரா’ குறித்து தான் கூறியதாக வெளியான செய்தி ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று தெரிவித்திருந்தார். சிறிசேனாவை கொல்ல முயற்சி நடப்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு தகவல் கொடுத்ததாக போலீஸ் உளவாளி நமல் குமாரா என்பவர் கடந்த மாதம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு மூத்த போலீஸ் அதிகாரி நலக்கா சில்வா மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்சேவை கொல்லவும் சதி நடைபெற்றதாக தெரிவித்தார்.

இது பற்றி நமல் குமாராவிடம் இலங்கை சிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், குமாரா மற்றும் சில்வா அளித்துள்ள ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சதி தொடர்பான குமாராவின் தொலைபேசி விவரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதால், தொழில்நுட்ப உதவியுடன் அவற்றை திரும்ப பெற சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் உதவியை நாட போலீசார் முடிவு செய்துள்ளனர். இலங்கை சட்டப்படி, வெளிநாடுகளிடம் இருந்து இதுபோன்ற உதவியை பெறுவதாக இருந்தால் நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். அதன்படி, நீதிமன்ற ஒப்புதலை சிஐடி போலீசார் பெற்றுள்ளனர். ஹுவேய் நிறுவனத்தின் உதவியுடன் நமல் குமாராவின் தொலைபேசி உரையாடல்களை பெற்று, விசாரணையை முடுக்கிவிட முடிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>