×

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 70 லாரி கற்கள் வாங்கப்பட்டுள்ளது: விஷ்வ இந்து பரிஷத் தகவல்

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 70 லாரி கற்களை வாங்கியுள்ளதாக விஷ்வ இந்து பரிஷத் தகவல் தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், வரும் அக்டோபர் 29-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அயோத்தி தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் என விஷ்வ இந்து பரிஷத் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்காக 70 லாரி கற்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கற்கள் அயோத்தியை வந்தடையும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்காகவே தாங்கள் காத்திருப்பதாகவும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தர பிரசேத சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி பிரமாண்ட வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி என்பதால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தடையின்றி நடக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ram Temple ,Ayodhya , Ram temple in Ayodhya, Larry stones, Vishwa Hindu Parishad
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்