×

திருநெல்வேலியை திரும்பிப் பார்க்க வைத்த மகா புஷ்கர விழா : தாமிரபரணியில் 12 நாளும் குவிந்த மக்கள் வெள்ளம்

நெல்லை: தென்மாநில மக்களை திருநெல்வேலியை திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் விழாவான மகாபுஷ்கர விழா நேற்றோடு நிறைவு பெற்றது. தாமிரபரணி ஆற்றங்கரைகளில் 12 நாட்களும் காணும் இடமெல்லாம் மனித தலைகளாக தென்பட்டது அனைவரையும் அதிசயிக்க வைத்தது. பொதிகை மலையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணி குறித்து சங்க காலத்தில் இருந்தே பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும் தென்மாநிலங்களை சேர்ந்த பலருக்கு புராணங்களில் வரும் பொதிகை மலையும், அகத்தியரும் தெரிந்த அளவிற்கு கூட தாமிரபரணி குறித்து அதிகளவில் புரிதல் இல்லை. ஆண்டாண்டு காலமாக நதிநீர் பிரச்னையில் சிக்கி தவிக்கும் காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட ஆறுகளே நினைவில் நிற்கின்றன. இதை மாற்றிக்காட்டும் விழாவாக தாமிரபரணி மகா புஷ்கர விழா தற்போது அனைவரையும் ஈர்த்தது.

அதிலும் ஆந்திராவில் இருந்து இம்முறை ரயிலில் இறங்கிய ஒவ்வொரு பயணியும் ‘தாம்ரவருணி, குறுக்குத்துறை, பாவநாசம்’ என்ற மனப்பாட வாய்பாடுகளை ஒப்பித்துக் கொண்டே இறங்கியது ஆட்டோக்காரர்களை கூட ஆச்சரியப்பட வைத்தது. நாடு முழுக்க திருநெல்வேலி அல்வா மட்டுமே பரிட்சயப்பட்டிருந்தது. அந்த அல்வாவுக்கே தாமிரபரணி தண்ணீர்தான் காரணம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக மகாபுஷ்கரணி நிகழ்வுகள் அமைந்தன. ஒவ்வொரு நாளும் ஆற்றில் குவிந்த கூட்டம் கணக்கில் அடங்காதது. தாமிரபரணி புஷ்கர விழா கமிட்டியினர் 12 நாளில் சுமார் 50 லட்சம் பேர் நீராட வருவர் என எதிர்பார்ப்பை விதைத்தனர். ஆனால் விழாவுக்கு வந்த கூட்டம் அதையும் தாண்டியது. தீர்த்த கட்டங்கள் என சிலவற்றை குறிப்பிட்டிருந்தாலும், ஆற்றில் அனைத்து இடங்களிலுமே கூட்டத்தை காண முடிந்தது. அதிலும் கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரையிலான விடுமுறை காலக்கட்டத்தில் தாமிரபரணி உச்சபட்ச கூட்டத்தை எதிர்கொண்டது.

முறப்பநாடு தீர்த்தக்கட்டத்தில் குளிக்க திரண்ட கூட்டத்திற்காக நான்கு வழிச்சாலையில் ஒருவழிப்பாதையை அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாபநாசம், அம்பை, முக்கூடல், திருவிடைமருதூர், நெல்லை, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட தீர்த்தக் கட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். சில தீர்த்தக்கட்டங்களில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேலாக கூட்டத்தை பார்க்க முடிந்தது. பிரம்மமுகூர்த்த காலத்தில் நீராடுதல் நலம் என்பதால் தாமிரபரணியில் கடந்த 12 தினங்களாக அதிகாலை 4 மணிக்கே ஆற்றை தட்டி எழுப்பிய கூட்டம் அதிகம். துறவியர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என ஆளாளுக்கு தாமிரபரணியை முற்றுகையிட்டதால் அவர்களுடன் பெருங்கூட்டமும் ஆற்றங்கரைக்கு வந்தது.

காவல்துறையும், தீயணைப்பு துறையும், நெல்லை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளும் கடந்த 12 தினங்களாக கண் துஞ்சாது ஆற்றையே வட்டமிட்டனர். ஆற்றில் ஆடைகளாக மிதக்கும், ஆற்றங்கரைகள் குப்பை கூளங்களாக மாறும், நதியை மாசுபடுத்தி விடுவர் என்ற எதிர்மறை கருத்துகள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகள் துடைத்தெறிந்தன. தாமிரபரணி ஆறு இரவு நேரங்களில் தீபங்களையும், மலர்களையும் மட்டுமே எதிர்கொண்டது. ஆற்றில் காலை முதல் மாலை வரை மனித தலைகளாகவே தென்பட்டன. குற்றாலத்தில் சீசன் காலத்தில் தென்காசியில் தென்படும் வாகன போக்குவரத்து நெருக்கடியை நெல்லை, அம்பை, பாபநாசம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர சிறிய நகரங்களும் சந்தித்தன.

ஒரு சில ஆட்டோக்கள் தெலுங்கில் தீர்த்தக்கட்டங்களை எழுதிக் கொண்டு மக்கள் மத்தியில் உலா வந்தன. கடந்த 12 தினங்களாக நெல்லையப்பர் கோயில், பாபநாசம் சிவன் கோயில், முறப்பநாடு குருபகவான் ஸ்தலங்களில் உச்சபட்ச கூட்டத்தை காண முடிந்தது.144 ஆண்டுகளுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததற்கு சரித்திர சான்றுகள் உள்ளதா, கங்கை போல் தாமிரபரணி ஆறும் அசுத்தமாகும், மழையால் ஆற்றில் வெள்ளம் வரும், உயிர்பலி அதிகமாகும் என பல்வேறு விமர்சனங்கள் விழாவிற்கு முன்பாக எழுப்பப்பட்டன. ஆனால் அதையெல்லாம் மீறி புஷ்கர விழா ஏதோ ஒரு வகையில் சாதித்து விட்டதாகவே தோன்றுகிறது. புஷ்கர விழாவை புனித நதிக்கான விழிப்புணர்வு என எடுத்துக் கொண்டாலும் சரி, வர்த்தகம், ஆன்மீகம், சுற்றுலா என எந்த வகையில் எடுத்து கொண்டாலும் சரி, எல்லா தரப்பையுமே இவ்விழா திருப்திப்படுத்தி விட்டு சென்றிருக்கிறது. என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maha Pushkara Festival ,Tirunelveli ,Thamiraparani , Tirunelveli, Maha Pushkara Festival, Thamiraparani
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!