×

வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தால் குற்றாலத்தில் இருந்து நேராக கோட்டைக்குதான் செல்வோம்: தங்க தமிழ்செல்வன் பேட்டி

வி.கே.புரம்: வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தால் குற்றாலத்தில் இருந்து நேராக கோட்டைக்குத்தான் செல்வோம் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்செல்வன், சுப்பிரமணியன், கதிர்காமு, பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, பிரபு, ரங்கசாமி ஆகியோர் நெல்லை மாவட்டம் பாபநாசம் சித்தர்கள் கோட்டத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நேற்று புனித நீராடினர்.
பின்னர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது: இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல தீர்ப்பு வர இருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்தால் எங்களில் 18 பேரில் ஒருவர் முதல்வர் ஆவார். ஆட்சியை கலைக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக குற்றாலத்தில்  நேற்று காலை தங்க தமிழ்செல்வன், கதிர்காமு ஆகியோர் பழைய குற்றாலம் கார் பார்க்கிங் - டோல்கேட் வரை நடைபயிற்சி சென்றனர். அப்போது தங்க தமிழ்செல்வன் கூறுகையில், குற்றாலத்தில் 2 நாட்கள் தங்கியிருப்போம். தகுதிநீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் நேரடியாக கோட்டைக்குத்தான் செல்வோம். தற்போது எங்களுடன் 20 பேர் உள்ளனர். இங்கு மேலும் இருவர் வருவார்கள். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் போனில் பேசிய பாலியல் பேச்சு தொடர்பாக வெளியான ஆடியோவுக்கும், அமமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமைச்சர் ஜெயக்குமார், மாபியா கும்பல்தான் இந்த ஆடியோவை வெளியிட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையில் அவரது மாமியார் கும்பல்தான் அந்த ஆடியோவை வெளியிட்டு உள்ளது என்றார்.

வேறு ரிசார்ட்டுக்கு இடம் மாறினர்
குற்றாலம் வந்துள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 7 பேர், நேற்று முன்தினம் இரவு பழைய குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட்சில் தங்கினர். நேற்று காலை வாக்கிங் முடித்து பாபநாசம் புறப்பட்டு சென்று புனித நீராடினர். சித்தர்கள் கோட்டத்தில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து ரிசார்ட்டுக்கு திரும்பிய அவர்கள், மதியம் 2 மணிக்கு பிறகு ரிசார்ட்சை காலி செய்து ஐந்தருவி அருகேயுள்ள இசக்கி ரிசார்ட்சில் தங்கியுள்ளனர். நேற்றிரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச் செல்வன் ஆகியோர் ரிசார்ட்டுக்கு வந்தனர். மொத்தம் 13 பேர் குற்றாலம் வந்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fortress ,interview ,court ,Thamilchelvan , In favor of judgment, to go to the castle, Gold Thamilselvan interviewed
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...