×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 3 நாள் கடையடைப்பு போராட்டம்: சென்னை உண்ணாவிரதத்தில் விக்கிரமராஜா எச்சரிக்கை

சென்னை: வணிகர்களை புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தில் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.வணிகர்களை புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த போராட்டத்துக்கு சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாவட்ட தலைவர்கள்  பி.ஜெயபால், என்.டி.மோகன், என்.ஜெயபால், ரவி, ஆதிகுருசாமி, நந்தன், கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பால்ஆசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல்,  வரவேற்றார்.உண்ணாவிரதத்தை அகில இந்திய வணிகர் சம்மேளன பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தொடங்கி வைத்தார். இதில், மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விளக்க உரையாற்றினார்.  உண்ணாவிரதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத்தில் விக்கிரமராஜா அளித்த பேட்டி:வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால் அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.  எங்களுடைய கோரிக்கைகளை மத்திய, மாநில தரப்பில் அழைத்து பேசி விரைந்து தீர்வு காண வேண்டும். கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி டிசம்பர் 19ம்தேதி நாடாளுமன்றம் நோக்கி  மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர் பங்கேற்பார்கள். முதல் கட்டமாக தென்மண்டல அளவில் அதாவது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் முழு கடையடைப்பு நடத்தப்படும். இந்த  கடையடைப்பு 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்களின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிப்போம். வணிகர்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை செய்ய முடியும் என்பதை நிரூபிப்போம். இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wickramarajah ,stampede protest ,state governments , Central,state governments ,3 day barrier fight: Wickramaraja, Chennai fasting
× RELATED தமிழில் அறிவிப்பு உள்ளிட்ட வழக்குகள்...